பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 இத் திணையினை நடுவண் ஐந்திணை நடுவனது என்றுதான் குறிக்கின்றாரே அன்றி அகத்திணையியலில் இதன் பெயரை யாண்டும் கூறவில்லை. காலம் பற்றிக் கூறும் நூற்பாவில் கூட நடுவுநிலைத் திணை' என்றே குறிக்கின்றாரே ஒழிய இத்திணையின் பெயரை அங்கும் குறிக்கவில்லை. எனில் நடுவுநிலைத்திணை'பாலை' என்ற வழங்காது எவ்வாறு வந்தது? தொல்காப்பியனார் 'பாலை' என்ற பெயரையே சுட்டவில்லையா? உரையாசிரியர்களால் ஏற்பட்ட வழக்காறா? என்ற ஐயங்கள் அகத்திணையியலைப் பயிலு வோர்க்குக் தோன்றுதல் இயல்பே. இந்த ஐயங்களை அறுக்கின்ற வகையில் தொல்காப்பியனாரின், 'வாகை தானே பாலையது புறனே என்ற புறத்திணையியல் நூற்பா திகழ்கிறது. இந் நூற்பாவில்தான் பாலை என்ற சொல்லாட்சியினை முதன் முதலில் காணுகின்றோம். நடுவண் ஐந்தினை நடுவனது பாலை என்பதை உய்த்துணர வேண்டிய நிலையிலேயே தொல்காப்பியனார் அமைக்கின்றார். 'வெட்சி தானே குறிஞ்சியது புறனே 'வஞ்சி தானேமுல்லையது புறனே' 'உழிஞை தானே மருதத்துப் புறனே' 'தும்பை தானே நெய்தலது புறனே' 'வாகை தானே பாலையது புறனே' காஞ்சி தானே பெருந்திணைப் புறனே' பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே' என்ற புறத்திணையியல் நூற்பாப் பகுதிகள் அகத்திணை ஏழனுக்குப் புறனான புறத்திணை ஏழனை உணர்த்தி நிற்கின்றன. இவற்றுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை, கைக்கிளை என்ற ஆறு அகத்திணைகளின் பெயர்களை அகத்தினையியலிலேயே அறிகின்றோம். எஞ்சி நிற்பது பாலைத்திணை ஒன்றே. எனவே தொல்காப்பியனார் அகத்திணையியலில் குறிப்பிடும் 'நடுவண் ஐந்திணை நடுவனது ஆகிய நடுவுநிலைத்திணை'இப்பாலைத்தினையே ஆதல் வேண்டும்.