பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 இதுவரை ஆண்மக்கள் தம் பிரிவினை உணர்த்தியவர் அடுத்துவரும் நூற்பாக்களில் தலைமகனுடன் தலைமகள் சென்ற நிலையில் யார்யார்க்குக் கூற்று நிகழும் என்பதை 39 முதல் 48 வரை உள்ள நூற்பாக்களில் அறிவிக்கின்றார். கூற்று நிகழ்வகை தலைவன், தலைவி முதலிய கூற்று நிகழ்த்துதற்குரியோர் அனைவரும் அகவொழுக்கம் பற்றிய கருத்தை மறைத்துக் கூறல் வேண்டின் உள்ளுறை உவமையாலும், மறையாது கூறல் வேண்டிய இடத்தே வெளிப்படையாகவும் கூறுவர் என்பர் தொல்காப்பியனார். அகப்பாடல் மரபுகள் அகப்பாடல்கள் நாடக வழக்கையும், உலக வழக்கையும் தழுவி, கலிப்பா, பரிபாடல் என்ற இருவகைப் பாவகை யாலும் இயற்றப்படல் வேண்டும் என்பதை, 'நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்' என்ற நூற்பா வரையறுக்கின்றது. இவ்வாறு இயற்றப் படும்போது அப்பாடல்களில் தலைமக்களின் இயற்பெயர் இடம்பெறுதல் கூடாது என்பதை, 'மக்கள் நுதலிய அகன்ஐந்திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்" என்ற நூற்பா வலியுறுத்துகின்றது. அவ்வாறு இயற்பெயர் இடம்பெற அமைப்பது புறத்திணைப் பாடல்களுக்கு உரியதே அன்றி அகத்திணைப் பாடல்களுக்கு உரியது ஆகாது எனபதை, 'புறத்தினை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே' என்ற தொல்காப்பியனார் வாக்கால் உணரலாம்.