பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 "தன்னுரு வேட்கை கிழவன்முன் கிளத்தல் எண்ணுங் காலை கிழத்திக் கில்லை பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப" என்பது அந்நூற்பாவாகும். மேலும் தலைவன் தலைவியிடத்தே புணர்ச்சி கருதிக் கூறும் சொல்லெதிர் உடம்பட்டுக் கூறுதல் அருமைத்தாதலின் அதனை மறுத்துக் கூறும் மொழியே தலைவியினிடத்து உண்டாம் என்பர். "சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் அல்ல கூற்றுமொழி அவள்வயி னான" என்பது அந்நூற்பாவாகும். இன்னும் தலைவியின் மாண்பு களைத் தொகுத்து, 'கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும் மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்" என்று அவர் கூறுகிறார். தலைவி என்றும், கிழவி என்றும் கூறுதற்குத் தக தலைவியானவள் தலைவனைத் தானே கண்ணுற்று அவனுடன் கூடியொழுகினாள். இஃதறிந்த தமர் இவளை வேறு மணமகனுக்கு மணம் செய்ய முயன்றனர். தான் ஒன்றாக விரும்பிய தலைவனை மணந்து கொள்ளுதலே தலைவிக்கு அறமாதலின் அக்கருத்தினைத் தோழி முதலி யோர்க்கு அறிவுறுத்தலைத் தொல்காப்பியனார் அறத்தொடு நிற்றல் என்பர். தலைவிக்குள்ள அறமாவது தலைவன் வரம்பு கடவாமையாகும் என்பதை அவர், அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையில்" என்பதனாலும் அறத்தொடு நிற்றல் என்பதனாலும் புலப்படுத்துகிறார். இவ்வாறு தலைவியின் மாண்புகள் பல கூறப்பட்டுள்ளன. இம் மாண்புகள் "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவன் மாணாக் கடை" என்னும் திருக்குறளை நினைவூட்டுகின்றன.