பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மனம் தோற்றுவாய் ஆணும் பெண்ணும் கூடி வாழ்தல் என்பது, உலகத்தில் எல்லா நாட்டு மக்களிடத்தும் நிகழ்கின்ற ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். இது உலக ஆக்கத்திற்கு மிகவும் இன்றியமையாததொன்றாம். இதற்கு மணம் என்றும் மன்றல் என்றும் பெயர். மணம் என்றால் கூடுதல். இதனை மணத்தல் என்று கூறுவர். மன்றல் என்றாலும் கூடுதல் என்றே பொருள். மக்கள் கூடுமிடத்திற்கு மன்றம் என்று பெயரிருத்தலை அறிக, மணத்தலுக்கு எதிர் தணத்தல் என்பர். இதனைத் துறவு என்று கூறுவர், தமிழர் கண்ட அறம் இரண்டேதான். ஆணும் பெண்ணும் மணந்து செய்யும் அறத்தை இல்லறம் என்றும் அவர் பிரிந்து செய்யும் அறத்தைத் துறவறம் என்பர். வடமொழியாளர் இல்லறத்திற்கு முற்பட்ட ஆண்மகன் நிலையைப் பிரமசரியம் என்றும் இல்லற நிலையைக் கிரகஸ்தம் என்றும் துறவிற்கு முந்திய நிலையை வானப்பிரஸ்தம் என்றும் ஆண்மகன்தன் துறவு நிலையைச் சந்யாசம் என்றும் நான்கு நிலைகளைக் கூறுவர். எனவே இல்லறம் துறவறம் எனக் கூறுதல் தமிழர் நிலை என்றும், பிரமசரியம் கிரகஸ்தம் வானப் பிரஸ்தம் சந்யாசமென நான்கு நிலை கூறுதல் வடமொழியாளர் வழக்கம் என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழர் ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலைக் கூடுதல் என்று பொருள்படும் மணத்தல் என்று சொல்லால் மணம், திருமணம் என்று கூறுகின்றனர். வடமொழியாளர் வகுத்தல், மேற்கொள்ளுதல் என்று பொருளில் விவாகம் என்பர். எனவே குடும்பத்தைச் சுமத்தல் அல்லது கிரகஸ்த தருமத்தைச் சுமத்தல் என்ற பொருளில் அவ்விவாகம் என்ற சொல் வழங்குகிறது.