பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காம நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் அவை கருதிய பொருட் பகுதி பதினாறாகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு’ என உரை வரைந்துள்ளார். அவர் குறித்த முப்பத்திரண்டாவன நகை முதலாகிய எண்வகைச் சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பாடுபொருளும், அவற்றை நுகருங்கால் தோன்றிய சுவையுணர்வும், அதுபற்றி நுகர்வோர் உள்ளத்தே தோன்றும் மனக் குறிப்பும் அக்குறிப்பின் வழி அவரது உடம்பின் கண்ணே புலப்பட்டுத் தோன்றும் சத்துவம் எனப்படும் விறலும் ஆகும். அவற்றைக் கருதிய புறன் பதினாறு என்றது எண்வகைச் சுவை பற்றிய மனக்குறிப்புக்கள் எட்டும் அக்குறிப்பின் வழி உடம்பிற்புலப்பட்டுத் தோன்றும் விறல் (சத்துவம்) எட்டும் ஆகும் என்பது பேராசிரியர் தரும் விளக்கமாகும் .

பிறன்கோட்கூறல் என்னும் உத்திபற்றி நாடகத்தமிழ் நூலார் கொள்கைகளைத் தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியல் முதலிரண்டு சூத்திரங்களிலும் விரித்துக் கூறியுள்ளார் என இளம்பூரணரும் பேராசிரியரும் எழுதிய இவ்வுரைகளை நாவலர் பாரதியார் பின் வருமாறு மறுத்துரைக்கின்றார்.

'பிற்கால உரைகாரற் தொல்காப்பியருக்குக் காலத்தாற் பிந்திய வட ஆரியக் கூத்து நூல்களின் கொள்கைகளே தொல்காப்பியரும் கூறுவதாகக் கொண்டு, இவ்வியற்றமிழ்ச் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்பட்டுச் சொல்லொடு சொல் பொருந்தா வல்லுரை வகுத்து மயங்க வைத்தனர்' என்பது பாரதியார் கூற்றாகும். இக்கூற்று வரலாற்று உண்மைக்கு மாறுபட்டதாகவே தோன்றுகின்றது.

பாரதியார் கருதுமாறு அகத்திணை புறத்தினையொழுகலாறு களில் மக்களது உள்ளுணர்வுகளால் இயல்பாக நிகழும் மெய்ப்பாடுகளையே செய்யுளுக்குரிய உறுப்பாகக் கொண்டு கூறுவது இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் என்பது இளம்பூரணர் பேராசிரியர் என்னும் ஆசிரியர் இருவர்க்கும் ஒத்த முடிபாகும். இயற்றமிழுக்கு இலக்கணங் கூறப்புகுத்த தொல்காப்பியனார்,

23

23