பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தொல்காப்பியம்-நன்னூல்



(உ-ம்) நாழிட் உரி நாடுரி எனவரும், இச்சூத்திரப் பொருளை,

     உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே, நன். 204) 

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.

   இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்தால் குற்றியலுகரவீறும் புள்ளியிறுபோலும் என ஆசிரியர் மாட்டேற்றிக் கூறுதலின், குற்றியலுகரவீற்றின் முன்வரும் உயிர்க்கும் இவ்விதி பொருத்த முடையதாகும் என்பது அச்சூத்திரவுரையுள் விரிவாக விளக்கப் பட்டது.
     மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும். (தோல். 139) 
  இது புணர்ச்சியிடத்து உயிர்மெய், உயிர் நீங்கியமொழிப் படுவதோர் விதி கூறுகின்றது. புணர்ச்சியுள் உயிர் மெய் யெழுத்தை மெய்யும் உயிரும்என வேறுபிரித்துச் செய்கை செய்தல் இன்றியமையாததாதலின் இவ்விதி ஈண்டுக் கூறப் பட்டது.
   (இ-ள்) மெய், தன்னோடு கூடி நின்ற உயிர் புணர்ச்சி யிடத்து நீங்கியவழித் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும் எறு.
   (உ-ம்) ஆலிலை-ஆல்+இலை, அதனை-அதன்+ஐ எனவரும்.
     எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே 
     உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார். (தொல்.140)
   இஃது உயிரீறு உயிர் முதன் மொழியொடு புணரும்வழி நிகழ்வதோர் கருவி கூறுகின்றது.
     (இ-ள்) எவ்வகை மொழிக்கும் உயிர்முதல்மொழி வருமிடத்து உடம்படு மெய்யினது வடிவை இடையே கொள்ளுதலை விலக்கார் ஆசிரியர் (எ-று).
   உடம்படு மெய்யாவன யகரமும் வகரமுமென்பது  “உடம்படு மெய்யெ யகார வகாரம், உயிர்முதன் மொழி வரூஉங் காலையான” என வரும் பழைய சூத்திரத்தாற் புலனாம்.
   “இகரவீறும், ஈகாரவீறும், ஐகாரவீறும் யகர உடம்படு மெய் கொள்வன. அல்லன வெல்லாம் வகரமெய் கொள்வன” என்பர் உரையாசிரியர், ஏகாரம் யகரமும் வகரமும் கொள்ளும் என்பர் நச்சினார்க்கினியர். இவ்விருவகைப் பொருளும் அடங்க,