இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
228
தொல்காப்பியம்-நன்னூல்
கட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை. (தொல்.427)
இதுவும் இவ்வாறிற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்குமுடிபு கூறுகின்றது.
(இ-ள்) சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர் மொழிக் குற்றுகரமும் யா வென்னும் வினாவை முதலாக வுடைய மென்றொடர்மொழிக் குற்றுகரமும் வல்லெழுத்துப் பெறுதலாகிய அவ்வியல்பிற்றிரியாது மிக்கு முடியும்.
(உ-ம் ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும்.
“இயற்கை” என்றதனால் இருந்து கொண்டான், ஆண்டு சென்றான் என மென்றொடர்க் குற்றியலுகரவீற்று வினை யெச்சம் இயல்பாயும், செத்துக்கிடந்தான் செற்றுச் செய்தான் என வன்றொடர்க் குற்றியலுகர வீற்று வினையெச்சம் மிக்கும் முடிதல் கொள்ளப்படும்.
யாவினா மொழியே இயல்பு மாகும். (தொல்,428)
இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது.
இ-ள் மேற்கூறியவற்றுள் யா வினாவை முதலாகவுடைய சொல் முற்கூறியவாறின்றி இயல்பாயும் முடியும் எறு.
(உ-ம் யாங்கு கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும்.
இவ்விடத்து யாங்கு என்பது எப்படி என்னும் வினாப் பொருளை உணர்த்திற்றென்பர் நச்சினார்க்கினியர்.
இயல்பும் ஆகும் என்ற உம்மையால் மிக்கு முடிதலே வலியுடைத்து.
அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. (தொல்,429)
இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.
(இ-ள்) சுட்டு முதன் மூன்றும் யா முதன் மொழியுமாகிய அந்நான்கு மென்றொடர் மொழிகளுள் தம் மெல்லொற்றாய தன்மை திரிந்து வல்லொற்றாகாது இயல்பாய் முடியும் என்பதாம்.