உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

59



 நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொரு மொழியெனப் பெயர் தந்தும், தொடர்மொழியீற்றினை உயிர்த் தொடர். இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐவகையாக்கியும் பின்னர்க் கூறுவர் ஆசிரியர் (கு 409). இவ்வாறே நன்னூலாரும்,
     நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடை 
     தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் 
     அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே,    (நன். 94)
   என்பதனாற் குற்றுகரத்தை அறுவகையாக்கிக் கூறுவர். தொடர்மொழியென்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் “இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி யெனக்கொண்டது போலன்றிப் பவணந்தியார் ஈரெழுத்து ஒரு மொழியையும் தொடர்மொழியாகக் கொண்டாராதலான் பிறமேற்றொடர்தல் நெடிலுக்கில்லையென்பது பட நெடிலை ஒடுக்கொடுத்துப் பிரித்தல் இன்றியமையாதாயிற்று.
   இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே 
   கடப்பா டறிந்த புணரிய லான. (தொல். 37)

இது குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துகின்றது.

   (இ-ள்) அக்குற்றியலுகரம் புணர்மொழி யிடைப்படின் குறுகுமிடமும் உண்டு; அதன் புணர்ச்சி முறைமையறியும் குற்றியலுகப் புணரியலுள் என்பதாம்.
   இடைப்படினுங் குறுகுமென உம்மையை மாற்றி யுரைப்பார் இளம்பூரணர். இடன் என்றதனால் இக்குறுக்கம் சிறுபான்மையென்க.
  இடைப்படிற் குறுகுமிடத்தைக் குற்றியலுகரப்புணரியலுள் “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லையியற்கை நிலையலுமுரித்தே” என்பதனாற் சுட்டின்ார் ஆசிரியர். இச்சூத்திரம் குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகி வருமென்கின்றது எனக் கருத்துரைத்து, அவ்வுகரம் ஒரு மொழியுளன்றிப் புணர்மொழி யிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறுகுமிடனுமுண்டு; அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப்பெறுவதெனின் அதன்புணர்ச்சி முறைமையறியுங் குற்றியலுகரப் புணரியலுள்,