உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

67



  (இ-ள்) ஓரெழுத்தானாகும் ஒரு மொழியும் ஈரெழுத்தானாகும் ஒரு மொழியும், இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துக்களால் இசைக்கும் தொடர்மொழியுடனே கூட மொழிகளில் எழுத்துக்கள் ஒலித்து நிற்கும் நிலைமை மூன்றேயாம் அவை தோன்றிய நெறிக்கண் எ-று.
  தனியே மொழியாய் வரும் ஓரெழுத்தை ஒரெழுத்தொரு மொழி எனவும், எழுத்து இரண்டாய் இணைந்து பொருள் தருவனவற்றை ஈரெழுத்தொருமொழி எனவும், மூன்று முதலாகத் தொடர்ந்திசைத்துப் பொருள் தருவனவற்றைத் தொடர்மொழி எனவும் ஆசிரியர் கூறிப்போந்தார். “ஒரெழுத் தொரு மொழியும் தொடர் மொழியும் என்னாது ஈரெழுத் தொரு மொழியும் ஒதினார்; சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி” என விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். பவணந்தி யாரும் “எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம்” (128) என எழுத்துக்கள் சொல்லாகும் நிலையை இரண்டாக அடக்கிக் கூறினார்.
 “ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர்” (குற்றிய-1) 
 “ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்” (குற்றிய-6) என்றாங்குப் பின்னர் எடுத்தாளுதற்பொருட்டும் இரண்டிணைந்து நிற்பனவற்றைத் தொடரென்னாது இரண்டிற்கு மேற்பட்டனவற்றைத் தொடர் என வழங்கும் தமிழ் வழக்கு நோக்கியும் மூவகைப்படுத்துக் கூறினார். இம்மொழி வகைகளைத் தாமேவகுத்துக் கூறுவதாகக் கூறாது “அவை தோன்றிய நெறியே” என ஆசிரியர் கூறுதலால், மொழித் தோற்றங் கருதிப் பண்டையோர் வகுத்த வழக்கு நெறி அஃதென்பது புலப்படுதலானும், இம்மொழி வகைகளைக் கூறுமுன்னேயும் “நெட்டெழுத்திம்பரும், தொடர்மொழியீற்றும்” என இரண்டிறந் திசைப்பனவற்றையே தொடர்மொழியாகக் கொண்டு ஆசிரியர் விதி கூறுதலானும், பல, சில என்னும் ஈரெழுத்தொரு மொழிகளைத் ‘தொடரல் இறுதி’ எனக் குறித்துப் போதலால் அவை தொடர் மொழியாகா என்பது ஆசிரியர் கருத்து ஆதலானும், அங்ஙனம் ஈரெழுத்தொரு மொழியினையும் தொடர்மொழி எனக்கோடல் பண்டைத் தமிழநூலார் கருத்தன்றென்பது தெளிய விளங்கும்.