பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


முன்னேறும் தானே! அதனால், தேச பக்தியோடு மக்கள் சேவைகளைச் செய்தார் திரு. ஜி.டி.நாயுடு.

சர். ஹார்தர் ஹோப்
தொழிற் பள்ளி!

சென்னை மாகாண கவர்னராக அப்போது பணியாற்றியவர் 'சர்.ஹார்தர் ஹோப்' எனும் வெள்ளைக்காரர். அவர் திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் நண்பர்.

தமிழ் நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டும், அதற்குப் பொறியியல் கல்லூரிகள் தோன்ற வேண்டும் என்று எண்ணிய திரு. நாயுடு, கவர்னரைச் சந்தித்து தனது விருப்பத்தை அவரிடம் மனுக்களாகக் கொடுத்து, கோயம்புத்தூர் நகரில் தனது சொந்த பெரும் பொருட் செலவில் 1945-ஆம் ஆண்டில் ஒரு தொழில் நுட்பப் பள்ளியைத் திறந்தார்.

அந்த தொழில் நுனுக்கப் பள்ளிக்குரிய அரசு ஆதரவுகளைப் பெருமளவில் செய்து கொடுத்தவர் சென்னை கவர்னர் என்பதால், அதற்கான நன்றியாக அந்தப் பள்ளிக்கு சர்.ஆர்தர் ஹோப் பாலி டெக்னிக் என்று பெயரிட்டார் திரு. நாயுடு.

அது சரி, கலைக் கல்லூரியைத் திறவாமல், நாயுடு ஏன் தொழில் பள்ளியைத் துவக்கினார்? ஏனென்றால், கலைக் கல்லூரிகள் தோன்றுவதால் பட்டங்கள் பெறலாமே தவிர, நாட்டிலுள்ள வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியாது என்பதால்தான். தொழில் நுட்பங் களைப் போதிக்கும் பாலிடெக்னிக் பள்ளியைத் துவக்கினார் நாயுடு.

மேற்கண்ட காரணம் மட்டுமே அன்று - தொழில் நுணுக்கப் பள்ளி தோன்றிட அந்த நேரம் வரை கோவை நகரிலும் சரி, அந்த மாவட்டத்திலும் சரி, கலைக் கல்லூரிகள் இருந்ததே தவிர, தொழிற் கல்லூரிகள் ஒன்றும் தோன்றவில்லை.

அதனால் திரு. நாயுடு, இரண்டு தொழில் கல்லூரிகளைத் திறக்கத் திட்டமிட்டு, முதலாவதாக சர்.ஹார்தர் ஹோப் தொழில் நுட்பப் பாலிடெக்னிக்கைத் துவக்கினார். அந்தக் கல்லூரியில், வானொலி, மோட்டார் தொழில்களின் பயிற்சிகள் முதலில் கற்பிக்கப்பட்டன.