பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

11


கிஷ்கிந்தா காட்சித் திடலிலும், தீவுத் திடல் காட்சியரங்கிலும், வி.ஜி.பி.-யின் தங்கக் கடற்கரையில் கண்டு களித்ததுபோன்ற உணர்ச்சிகளையும் நினைவூட்டின.

அதனால், ஜி.டி. நாயுடு விளையாட்டு இரயில் இயக்கம், அதன் அறிவியல் நுட்பச் சாதனை, எங்களை அடிமை கொண்டது. அந்த ஆண்டுகளிலேயே ஜி.டி. நாயுடு அவர்களது சிந்தனை, தற்போதைய ஆண்டுகளின் விஞ்ஞான வளர்ச்சியை நினைவூட்டி, வியப்பை விளைவித்தது என்றால், எத்தகைய ஓர் அறிவியல் சிந்தனையோடு அதை அவர் அக் காலத்திலேயே உருவாக்கி இருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேளாண்மைத் துறையில் ஜி.டி. நாயுடு, தேங்காய் புரட்சி, வாழைப் புரட்சி, நெற்பயிர்களது விவசாயப் புரட்சிகளை மட்டுமே செய்து காட்டியவர் அல்லர்.

விவசாயத் துறையிலே பருத்தி விளைவிப்பதில் புரட்சி, துவரையில் புரட்சி, பப்பாளிப் பழம் புரட்சி, ஆரஞ்சுப் புரட்சி, காலிஃபிளவர் புரட்சி, சோளம் புரட்சி போன்ற பல புரட்சிகளை எல்லாம் - தனது சொந்த விவசாயப் பண்ணையிலே விளைவித்துக் காட்டி நிரூபித்துச் சாதனை புரிந்த செயல் வீரர் செம்மல் ஜி.டி. நாயுடு என்றால், இது ஏதோ புத்தகச் சடங்குக்காகக் கூறப்பட்டதன்று என்பதை - இன்றைய இளைய தலைமுறையினர் உணர வேண்டுகிறோம்.

பிரிசிடென்சி அரங்கில் எங்களுடன் வலம் வந்த அந்த Guider ஆகிய வழிகாட்டி நெறிப்படுத்தும் மங்கையின் விளக்கவுரை, சாதனையுரைகளைச் சாற்றிய பாங்குரை, எங்களுடைய மன உணர்வுகளுக்கு ஒரு நல் விருந்தாக அமைந்தது.

அந்தப் பெண், செல் விருந்தோம்பி எங்களை வழியனுப்பி வைத்த பின்பு, வரு விருந்தினர் திரள்களுக்காக எங்களை விரைவுப் படுத்தி கொண்டே எங்களுடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

ஆனால், எங்களைப் பொருத்தவரையில் அந்த விஞ்ஞான அரங்கை விட்டு வெளியே வர முடியாத சொல்லொணா மகிழ்ச்சியில் திளைத்தோம்; இப்படியும் ஒரு விஞ்ஞானி தமிழ்நாட்டில் இருந்தாரா என்று மாணவர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள்.