கலைஞரின் சட்டமன்ற உரைகள்
99
உரையாற்றிய நண்பர் பூவராகன் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் இந்த இரண்டு மானியங்களிலே ஒதுக்கப்பட்ட தொகையை மாத்திரம்தான் கணக்கிட்டு குறிப் பிட்டார்கள் மானியக் கோரிக்கை எண். 24 தொழில்கள் என்ற தலைப்பிலே, 6.53 கோடி ரூபாயும், மானியக்கோரிக்கை எண். 51 தொழில் வளர்ச்சி குறித்த மூலதனச் செலவு என்ற தலைப்பில் 22.24 கோடி ரூபாயை மாத்திரம் கணக்கிட்டு 28 கோடி ரூபாய் தான் என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது விவாதிக்கப்படாத கோரிக்கை எண். 59 மாநில அரசு வழங்கும் கடன்களும் முன் பணங்களும் என்ற தலைப்பில் 19 கோடி ரூபாயையும் சேர்த்தால் 47.77 கோடி ரூபாய் ஆகிறது. அது மாத்திரம் அல்ல. அரசு உத்திரவாதத்தோடு வெளிச் சந்தையிலே 4.37 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கும் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன. இதனையும் கூட்டினால் 1990-91ஆம் ஆண்டு மொத்த ஒதுக்கீடு 52.14 கோடி ரூபாய் ஆகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 1989-90 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கப்பட்ட தொகை 44.29 கோடி ரூபாய்க்கு மாறாக இப்போது 52.14 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதை நான் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். மாநில அரசு நேரடியாக தொழில்களில் மூலதனத்தைப் போடுவதைவிட மிக அதிக அளவில் தொழில்களை ஊக்குவிப்பதில்தான் அக்கறை காட்டுகிறது என்பதை இந்த அவையிலே உள்ள மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள்.
எனவே, அரசுத் தரப்பிலே வழங்கப்படுகின்ற ஒதுக்கீடு இந்த அளவில் இருந்தாலும்கூட ஏனைய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், அரசு தொழில் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகின்ற இந்தத் தொகைகளையும், மூலதனத் தொகை களையும் ஈக்குவிட்டி, இவைகளையெல்லாம் கூட்டிப்பார்த்தால் தொழில்களுக்கான ஒதுக்கீடு நம்முடைய மாநிலத்திலே அதிகமாகவே இருக்கிறது என்பதை உணரக்கூடும். இந்த அரசினுடைய தொழில் கொள்கையைப் பற்றி கடந்த ஆண்டு இந்த மானியத்திலே நான் எடுத்துக்கூறியிருக்கிறேன். இன்றைக்கும் அதை நினைவூட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.