பக்கம்:தொழில் வளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தொழில் வளம்


நாட்டுத் தொழிலை எவ்வெவ்வாறு வளம்படுத்தி உள்ளது என்பதைக் காணல் சாலப் பொருந்துவதாகும்.

தமிழ்நாடு புதிதாகத் தொழில்வளம் பெற்றதன்று. தமிழ்நாட்டு வரலாற்றுப் பழங்காலத்திலேயே நாட்டில் எத்தனை எத்தனையோ தொழில்கள் வளர்ந்துள்ளன எனக் காண்கின்றோம். இன்று காண்கின்ற அளவுக்குப் அத்துணைப் பெரிய இயந்திர சாதனங்களோடு கூடிய கைத்தொழில்கள் அன்று நாட்டில் இல்லை என்றாலும், பிறநாட்டு மக்கள் இங்கே வந்து வாணிப வளளைப் பெருக்கிச் சென்ற அளவிற்குத் தமிழ்நாட்டில் கைத்தொழிலும் வாணிபமும் வளர்ந்திருந்தன என அறியமுடிகிறது. கிறித்து பிறப்பதற்கு நெடுநாளைக்கு முன்பே கிழக்கே சீனநாடு தொடங்கி மேற்கே கிரேக்க ரோம நாடுகள் வரையில் வாழ்ந்த மக்கள் வரிசை வரிசையாக இங்கே வந்து வாணிபம் செய்தார்கள் என்று வரலாறு காட்டுகிறது. எனவே அந்த நாளிலேயே–இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே—தமிழ்நாட்டில் தொழில்கள் நிறைந்திருந்தன. இயற்கை வளமும், அவ்வளம்படு பொருள்கள் கொண்டு செய்யும் தொழில்வளமும் நாட்டின் செல்வங்களாக இருந்தன. மேலை மலையில் வாழும் யானைகளின் தந்தம் கொண்டு வளர்ந்த கைத்தொழிலும், பட்டு, பருத்தி, மயிர் முதலியவை கொண்டு வளர்த்த கைத்தொழிலும், உயர்ந்த கட்டடங்களை அமைத்த தொழிலும், கப்பல் கட்டும் தொழிலும், போருக்கும் அமைதியான வாழ்வுக்கும் தேவையான ஆயிரமாயிரம் பொருள்களைச் செய்த கைத்தொழில்களும், கலை வளர்க்கப் பயன்பட்ட இசைக் கருவிகள் போன்ற பலவற்றைச் செய்த தொழில்களும் இன்னும் பலவும் தமிழ்நாட்டின் அன்றைய தொழில் வளத்தைக் காட்டுகின்றன. சங்ககால இலக்கியங்களையும் பிற்கால இலக்கியங்களையும் காணும்போது தமிழ் நாடு மிகப் பழங்காலந் தொட்டே தொழில்வளம் பெற்று விளங்கிற்று என்பது நன்கு விளங்கும். பத்துப்பாட்டுப் போன்ற சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/13&oldid=1381921" இலிருந்து மீள்விக்கப்பட்டது