பக்கம்:தொழில் வளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

11


காவியங்களிலும் காணும் நகர அமைப்புக்களும், மதில்களில் பொருத்தப் பெற்றிருக்கும் இயந்திரக் கருவிகளும், ஆடை அணிகளும், அழகார் மாளிகைகளும் நமக்கு அக்காலத்தில் மக்கள் மேற்கொண்ட தொழிற் செல்வ நலனை விளக்குகின்றனவே! பிற்காலத்தில் வந்த பல இலக்கியங்களும் இவ்வுண்மையை நமக்கு விளக்கத் தவறவில்லை. ‘ஆலையினில் வெம் புகைபோய் முகில்தோயும் ஆரூர்’ என்று சம்பந்தர் திருவாரூரில் வானளாவிய புகைபோக்கிகளையுடைய பல ஆலைகள் இருந்தன எனவும், அவற்றில் எழுந்த புகை வான முகட்டைத் தொட்டது எனவும் காட்டுகின்றார். எனவே இன்று காணும் விண்முட்டும் புகை போக்கிகளைக் கொண்ட ஆலைகளைப் போன்று ஏழாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாடு பல ஆலைகளைக் கொண்டு விளங்கியது என அறிய முடி கின்ற தன்றோ! ‘துனிதருசோலை ஆலைத் தொழில்மேவ’ என மற்றொரு வகையில் சோலையில் ஆலைத் தொழில் நடைபெற்றது என அவரே காட்டுகிறார். கடற்கரைப் பட்டினங்கள் பலவற்றிலும் ‘மலையின் உயர் மரக்கலங்கள்’ உலவிய சிறப்பையும் அவை ஏற்றிக் கொண்டுவரும் பல பொருள்களின் சிறப்பையும் இடைக்காலத்தில் பாராட்டுகின்றார்கள். மற்றும் தமிழ் நாட்டில் கடல்மேற் கலம் செலுத்திப் பலர் வாணிபம் செய்திருக்கிறார்கள் என்ற குறிப்பை நாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்திலிருந்தும் பெறுகிறோம். இவற்றாலெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் வளமும் வாணிய வளமும் மிகப் பழங்காலத்திலிருந்தே உயர்ந்த நிலையில் இருந்தன என அறிய முடிகின்றதன்றோ ! இன்று மீண்டும் தமிழகத்தில் தொழில்கள் வளருகின்றன. அவற்றின் வகைகளையெல்லாம் காண வேண்டாவோ!

உரிமை பெற்ற இந்திய நாட்டில் பல திட்டங்கள் தீட்டப்பெறுகின்றன. மக்கள் வாழ்வும் வளமும் பெற்று முன்னேற உள்ள வழிதுறைகள் அத்தனையும் ஆராயப்பெறுகின்றன. அவற்றுள் ஒன்றே தொழில் வளர்ச்சிக்கான ஆதிக்க நெறி. நாட்டில் தொழில் வளர எங்கெங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/14&oldid=1381928" இலிருந்து மீள்விக்கப்பட்டது