பக்கம்:தொழில் வளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தொழில் வளம்


வாய்ப்பும் வசதியும் உண்டோ அங்கெல்லாம் அவ்வத் தொழில்களைத் தொடங்க இருக்கும் சாத்தியக் கூறுகளை ஆராயப் பல்வேறு குழுக்களை அமைக்கின்றனர். பல வெளிநாட்டு அறிஞர்களும் நிபுணர்களும் ஆண்டுதோறும் வந்த வண்ணமே இருக்கின்றனர். ஒவ்வொரு தொழில் துறையிலும் வல்ல பலநாட்டு அறிஞர்கள் வந்து வந்து நாட்டின் எல்லாப் பாகங்களிலும் சுற்றி ஆராய்ந்து பல சாத்தியக் கூறுகளை எடுத்துக் காட்டுகின்றனர். அப்படியே பல வெளிநாட்டு அரசாங்கங்கள் நாட்டில் பல தொழில்களும் வளரத் தக்க வழியில் கோடி கோடியாகப் பணத்தைக் கடனாகவும் மானியமாகவும் மாற்றாகவும் கொடுத்து உதவுகின்றன. அப்படியே மத்திய, மாநில அரசாங்கங்களும் தத்தமது வரித்துறைகளை விரிவாக்கிப் புதுப்புது வரிகள் மூலம் பொருள்களைப் பெருக்கி அவற்றை நாட்டின் தொழில் வளம் பெருகவும் பிற துறைகள் முன்னேறவும் பயன்படுத்துகின்றன. அரசாங்கங்களே பல பெரும் தொழிற்சாலைகளை அமைத்துத் தொழில் வளர நேரடி முயற்சியில் ஈடுபடுகின்றன; பெருஞ் செல்வர் பலர் தனியாக வளர்க்க நினைக்கும் தொழில்களுக்குத்தேவையான நிதி உதவியை நல்குவதுடன் வெளிநாடுகளிலிருந்து தேவையான இயந்திர சாதனங்களையும் பிறவற்றையும் பெற உதவுகின்றன. நாட்டின் பல்வேறு நீர் ஓட்டங்களையும் அவற்றின் பெரு நெறிகளையும் ஆராய்ந்து அணை கட்டியும் கீழ் வீழ்த்தியும் மின்சார உற்பத்தியைப் பெருக்கி, அம்மின்சாரத்தைத் தொழிற்கூடங்களுக்கு அரசாங்கம் அனுப்ப ஏற்பாடு செய்கின்றது. அப்படியே நாடு முழுவதும் பற்பல தொழிற் பேட்டைகளை ஏற்படுத்திப் பல தொழில்கள் வளர ஆக்கப் பணிக்கு வழி கோலுகின்றது. பெருந் தொழில்கள் மட்டுமன்றி, குடிசைத் தொழில் போன்ற சிறு தொழில்களையும் இரண்டற்கும் இடைப்பட்ட நடுத்தரத் தொழில்களையும் வளர்க்கவும் பலவகையில் அரசாங்கம் உதவி வருகின்றது. பக்ராநங்கல் மின்சாரம் முதல் பாட்டியர் அப்பளம் செய்தல்வரை எத்தனையோ வகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/15&oldid=1398200" இலிருந்து மீள்விக்கப்பட்டது