பக்கம்:தொழில் வளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தொழில் வளம்


உற்பத்திக்குத் தேவையான பொருள்கள் சரியான அளவில் இல்லாமல் போனால், உற்பத்தி தடைபட்டுப் போகும். இயந்திர வசதிகள், ஆட்கள் வசதி முதலியவைகள் நல்ல முறையில் முழு அளவிற்கு உபயோகிக்கப்பட முடியாது போய் விடுகின்றது. ஆகையால் செலவுக்குத் தகுந்த உற்பத்தி இல்லாமல், குறைந்து, உற்பத்திச் செலவு அதிகமாகிறது. இதன் பலன் இரண்டு முக்கிய கட்டங்களை ஏற்படுத்தக் காரணமாக அமைகிறது. ஒன்று உற்பத்தியில் தாமதம் ஏற்படுவதால் வாக்களித்த நேரத்தில் நுகர்வோருக்கு வேண்டிய பொருள்களைக் கொடுக்கமுடியாது போய், அவர்கள் நம் பொருள்களை விட்டு வேறு ஒருவரின் பொருள்களை வாங்க வேண்டி வருகிறது. இரண்டாவது, நிறுவனத்தின் வருமானம் நிறைவு இல்லாமல் போவதால் தொழிலாளர்களின் முயற்சிக்குத் தகுந்த விதத்தில் ஊதியம் அளிக்க முடியாது நின்று, அவர்களின். வெறுப்புக்கு இடமாகிறது. மற்றும் வேண்டிய மூலப் பொருள்களை எந்த அளவில் எவ்வெப்பொழுது வாங்குவது என்று முன்கூட்டியே திட்டமிடாது போவதால் தேவைக்கும் அதிகமான பொருள்களை முன் கூட்டியே வாங்கிவிட நேருகிறது. அப்படி நேரிடும் நிறுவனத்தின் மூலதனம் இம்மூலப் பொருள்களில் முடங்கிப் போவதல்லாமல், அதற்கு வட்டி போன்ற மற்றச் சில செலவுகளும் ஏற்பட்டு உற்பத்திச் செலவு அதிகரிக்க ஏதுவாகிறது. ஆகவே விற்பனை முன் அறிவிப்பைப் போன்றே உற்பத்தித் திட்டமும் உற்பத்திக் கட்டுப்பாடும் மிகமிக முக்கியமானதாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/135&oldid=1381903" இலிருந்து மீள்விக்கப்பட்டது