பக்கம்:தொழில் வளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தொழில் வளம்


ஒன்று. தமிழ்நாட்டு மக்களுள் பெரும்பாலோர் உழவை நம்பியே வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்களுள் முக்கால் பகுதியினர் கிராமங்களில் வாழ்கின்றார்கள் எனக் கணக்கிட்டுள்ளனர். அத்துணைப் பெரும்பகுதியான மக்கள் உழவுத் தொழில் செய்பவர்களே. எனவே தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் உழவுத் தொழில் வளர்ந்தால்தான் பிறதொழில்களும் வளர்ந்து நாடு நலமுற்று ஓங்கும். தமிழ்நாட்டை விவசாய நாடு என்றே கூறுவர். எனவே உழவுத் தொழிலே நம்நாட்டைப் பொறுத்தமட்டில் முக்கியமாக வளர்ச்சி பெறவேண்டும். உழவு வளர வேண்டுமாயின் அதை வளர்க்கும் கிராமங்கள் வளர்ச்சியுறவேண்டும். இவ்வுண்மையை உணர்ந்த அரசாங்கத்தார் கிராம வளர்ச்சியில் கருத்திருத்துகின்றார்கள். என்றாலும் நம் நாட்டில் நகரங்கள் வளர்கின்ற அந்த அளவில் கிராமங்கள் வளர்ச்சி அடையவில்லை. இன்னும் எத்தனேயோ கிராமங்கள் எந்தவித வளர்ச்சியுமின்றி உள்ளதை நாமறிவோம். செல்லும் நல்ல சாலையற்று - போக்குவரத்துக்கு வழியற்று - மின்சார ஒளியற்று - பள்ளிக்கூடமோ மருந்தகமோ இல்லாத நிலையில் பல ஊர்கள் உள்ளன. நாட்டுக் கிராமங்கள் உயர்ந்தால்தான் நாட்டுச் செல்வவளன் உயரும். இந்த உண்மையை உணர்ந்தே அண்ணல் காந்தி அடிகளார் கிராமங்களை வளர்க்க அரும்பாடுபட்டுத் தாமும் கிராம வாழ்வை மேற்கொண்டார். அரசாங்கத்தையும் அத்துறையில் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டுப் பழங்கால அரசாங்கங்களும் கிராமங்களின் வளர்ச்சிக்கும் உழவுத் தொழில் வளர்ச்சிக்கும் முதலிடம் கொடுத்துப் போற்றின. உழவர்களுக்கு அக்கால அரசாங்கங்கள் முதலிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/177&oldid=1382110" இலிருந்து மீள்விக்கப்பட்டது