பக்கம்:தொழில் வளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தொழில் வளம்


மாட்டுவளம் செழிக்கவேண்டும். ஊர்தோறும் உழவுக் காலத்தில் மக்கள் மாடுகள் கிடைக்காது படும் அவதிகளை நேரே கண்டவர் தாம் உணர முடியும். அரசாங்கத்தார் அந்தத் துறையில் ஓரளவு கவனம் செலுத்துகிறார்கள் என்றாலும் அந்த அளவு போதாது என்பதே என் கருத்து நல்ல காளைகளையும், பசுக்களையும் அப்படியே எருமைகளையும்,கிடாக்களையும் பாதுகாக்கத்தக்க வகையில் பத்து ஊருக்காவது ஒரு சாதனம் அமையவேண்டும். கால்நடை மருத்துவர் நாட்டில் குறைவு. கால்நடை நோய்களோ நாட்டில் ஏராளம். அதிலும் வறண்ட பூமியில் பசும்புல்லும் காணாது வாடும் கால்நடைகள் நாட்டில் பல. எனவே அடுத்த திட்டக் காலங்களிலாயினும் உழவுத் தொழிலில் கருத்திருத்தும் நல்லவர்கள் முதலாவதாகக் கால்நடை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

கால்நடை வளர்வதால் உழவுக்குப்பல நன்மைகள் உண்டாகின்றன. வயலுக்குரிய நல்ல உரமாகிய சாணம் முதற்பயனாகும். ஆனால் நம்நாட்டில் சாணத்தைப் பலரும் எரிபொருளாகவே பயன் படுத்துகின்றனர். இது தவறு என்று கூறுவதோடு அமையாது நாட்டில் அந்த வழக்கத்தை நிறுத்தப் பாடுபட வேண்டும். சாணத்தால் ஆக்கும் வறட்டியாகிய எரிபொருளைக் காட்டிலும் எளிமையாகவும் விலை குறைந்ததாகவும் கிராமங்கள் தோறும் எரிபொருள் பெறுமாறு செய்தால் சாணமாகிய எரு நாட்டில் நல்ல விளைவை உண்டாக்கும் என்பது உறுதி. மற்றும் இன்னும் பல ஊர்களில் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளே பயன்படுகின்றன. இவ்வாறு பல வகையில் உதவும் மாடுகளை வளர்ப்பதே முதலாவதாகப் பயிர்த்தொழிலுக்குத் தீட்டும் திட்டமாக அமைதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/185&oldid=1382210" இலிருந்து மீள்விக்கப்பட்டது