பக்கம்:தொழில் வளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தொழில் வளம்


தொழிலிலும் வாணிபத்திலும் அவற்றோடு இணைந்த பிற நிலைகளிலும் உயர்ந்துள்ளதோ அந்த நாடே இன்று உலகில் சிறந்த நாடாக, வல்லரசு நாடாகப் போற்றப்படுகின்றது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அத்துறைகளில் போட்டியிட்டு வளர்கின்றன. மிகச்சிறு நாடுகளும் இன்று தொழில் துறையில் வளருகின்றன. எனவே நாமும் நம் தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய தேவை உண்டாயிற்று. தொழில் சமுதாயத்தின் உயிர் நாடியாகிவிட்டது. எனவே நாடு தொழில் மயமாகின்றது. இந்த வளர்ச்சியை–குறுகிய காலத்தில் அடைந்த–பெருமாறுதலை– உலகத்தலைவர் பலரும் வியக்கிறார்கள். பல அறிஞர்கள் நூல்கள் எழுதியுள்ளார்கள். இத்தகைய மக்கள் பெரும் பணியில் அறிஞர் தம் ஆய்வுப்பணியில் என்னுடைய இப்பணி ஒரு சிறு திவலை, எனவே தமிழ் நாட்டு அறிஞர்கள் இந் நூலை ஏற்று ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இந் நூலை வெளியிடுங் காலத்து எனக்கு உதவிசெய்த எல்லா அறிஞர்களுக்கும் என் தலை தாழ்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கும் அதன் தொழில் துறை, மின்னியல் துறைத் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்நன்றி. இந்நூலை நன்கு நோக்கி, அணிந்துரை தந்த முதலமைச்சர் திரு. மீ. பக்த வத்சலம் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடப்பாடுடையேன்.

தமிழ்நாடு மேலும் மேலும் தொழில் வளம் பெற்றுப் பிற துறைகளில் - பண்பாடு - நாகரிகம் - கலை முதலிய பிறதுறைகளில் - வழிகாட்டியாக உள்ளதுபோன்று இந்திய நாட்டுக்கு வழிகாட்டியாக - உலகத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டுமென்பது என் ஆசை. என் ஆசையை வருங்காலத் தமிழ்ச் சமுதாயம் நிறை வேற்றும் என்ற துணிவுடனே இந்நூலைத் தமிழன்னைக்குப் பாதகாணிக்கையாகப் படைக்கிறேன். வாழ்க தமிழ் நாடு ! வளர்க அதன் தொழில் வளம்!


தமிழ்க்கலை இல்லம் } அ. மு. பரமசிவானந்தம் சென்னை . 24-2-64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/19&oldid=1398202" இலிருந்து மீள்விக்கப்பட்டது