பக்கம்:தொழில் வளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

189



தேவைப்படும் என நிபுணர்கள் கணக்கெடுத்துள்ளனர். இவ்வளவு பெருந்தேவையை நம்நாடு நிறைவேற்றுமா என எண்ண வேண்டியுள்ளது. எனினும் அதற்கென பல உரத் தொழிற்சாலைகளும் அமைக்கப்பெறுகின்றன. நெய்வேலி, கோவை, தூத்துக்குடி முதலிய இடங்களில் உரத்தொழிற்சாலைகள் விரைவில் தொழிற்படத் தக்க நிலை காண்கின்றோம். இவ்வாறு உழவுத் தொழிலுக்குத் தேவையான எரு ஓரளவு சரி செய்யப்படுகின்றது. என்றாலும், கிராம மக்கள் சாணம் தழை போன்ற பல இயற்கை எருக்களைத் தங்கள் சூழலுக்கு ஏற்பவும் எளிதாகவும் ஆக்கிக்கொள்ள முயல்வார்களானால் மிக்க பயன் பெறுவார்கள் என்பது உறுதி

இத்தனையும் இருந்தும் உழ்வுத் தொழிலுக்கு நல்ல விதைகள் இல்லையானால் என் செய்வது? மக்கள் எத்தனையோ வகையில் தங்கள் தங்கள் தேவைக்கான விதைகளைத் தாங்களே ஆண்டுதோறும் சேர்த்து வைத்துக் கொள்ளுகிறார்கள். என்றாலும் காலக் கோளாறுகளாலும் நீர்க்குறைவாலும் பிற கொடுமைகளாலும் அடிக்கடி நல்ல விதைகள் எடுக்க முடிவதில்லை. சில ஏழை உழவர்கள் ஆறு மாதத்திற்குப்பின் வேண்டிய விதையைச் சேர்த்துவைக்கும் அத்துணைப் பொருளாதார நிலை யில்லாமலும் உள்ளனர். மற்றும் புதுமுறை ஆராய்ச்சியில் மண்ணையும் விதையையும் ஆய்ந்து 'இதற்கு இது பொருந்தும்', 'கதிரொருமுழமே நீளும் கட்டுமுக் கலமே காணும்' என்று விளக்க அரசாங்க விவசாயத்துறை தொழில்படுகிறது. எனவே நல்ல விதைகளைத் தேடித்தரும் பொறுப்பு அரசாங்கத்தையே சார்கின்றது. அவர்கள் மாவட்டந்தோறும் தக்கவர்களைச் சேர்த்து நல்ல விதைகளைத் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/192&oldid=1382226" இலிருந்து மீள்விக்கப்பட்டது