பக்கம்:தொழில் வளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தொழில் வளம்


லும் பெயர் பெற்றவை அல்லவா ! எனவே,சோலையை அமைத்துக் கொள்வது உழவர்தம் முதற் கடமை யாகும். இன்றும் சோலை சூழ்ந்த கிராமங்களுக்குச் சென்றால் அக்கிராம மக்கள் அச்சோலைகளின் பயனை நன்கு ஆரத்துய்க்கும் சிறப்பினைக் காணமுடியும். இவைகளையன்றி நான் முதலில் காட்டியபடி சோலைகளிலும், சிறு தோட்டங்களிலும் உள்ள பசுந்தழை உரம் வயலுக்கு நல்ல உரமாகி உயர்ந்தோங்க வாய்ப்பளிக்கின்றன. எனவே ஒவ்வொருவரும் தத்தம் ஊரைச் சோலை நகராக்கப் பாடுபடவேண்டும். இத்துறைக்கும் அரசாங்கம் ஆவனசெய்து வருகிறது, இனியும் என்றும் செய்யும் என்றும் நம்புகிறேன்.

கடைசியாக ஒன்றுகூறி இந்த உழவுத் தொழில் பற்றிய கட்டுரையை முடித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றேன். இத்துறையில் அவ்வவ்வூர்மக்கள் பொறுப்பைக் காட்டிலும் அரசாங்கப் பொறுப்பே அதிகமாகும். அதுதான் சாலை அமைத்தல். நாம் மேலே கண்டபடி எவ்வளவோ உழைத்துப் பயிரிட்டும் கைவருந்தியும் உண்டாக்கிச்செய்த பொருள்களைப் பெருக்கினாலும் அவற்றை உரிய சந்தைகளுக்குக் கொண்டு செல்லமுடியாது மக்கள் வருந்துவதைக் காண்கிறோம். தேர்தல் காலங்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒகு முறை – தேர்தலில் நிற்கின்றவர்கள் சுற்றி வருகின்ற ஒன்றைத் தவிர, பலர் அக்கிராமங்களைப் பிறகு எட்டிப்பார்ப்பதுகூடக் கிடையாது. அதிலும் இக்காலத்தில் அப்பெரியவர்கள் தற்காலப் போர்ச் சாதனையாகிய ‘ஜீப்’ (leep) என்னும் வாகனத்தில் எளிமையாகச் சுற்றிவந்து விடுகிறார்கள். எனவே கிராம மக்கள் தாங்கள் செல்வதற்கும் தாங்கள் விளைவித்த பொருள்களைச் செலுத்துவதற்கும் முடியாதவர்களாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/201&oldid=1382236" இலிருந்து மீள்விக்கப்பட்டது