பக்கம்:தொழில் வளம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

239



மின்சாரம் உண்டாயிற்று. 1925-ம் ஆண்டுக்குப் பிறகு மின்சாரத் துறையைப் பொறுப்புடன் ஏற்ற டாக்டர் C. P. இராமசாமி ஐயர் அவர்களே விரைந்து நாட்டில் மின்சாரம் வளரக் காரணமாக இருந்தார்கள். 1927-ல் பைகாரா நீர் மின்சார நிலையத் தொடக்கத்துக்கு அவரே முதற்காரணராவர், முதன் முதலாக 1932ல் பைகராவும் அடுத்து 1937-ல் மேட்டூரும் நீர் மின்சார நிலையங்களாக அமைக்கப்பெற்று அவற்றின் வழி மின்சாரம் நாட்டுக்கு வேண்டிய வகையில் பல்வேறு துறைகளில் தொழிற்படத் தொடங்கிற்று.

1944-ல் நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம் நீர் மின்சாரத் திட்டம் தொழிற்படத் தொடங்கிற்று. 1947-ல் சென்னை மின்சார் அமைப்பு அரசாங்க வசமாயிற்று. ஒப்பந்தப்படி ஆங்கில நாட்டுக் கம்பெனி அப்படியே அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டது. 1951-ல் மதுரையில் மின்சார நிலையம் அமைக்கப் பெற்றது. 1952-ல் மோயார் நீர்மின்சார நிலையம் நாட்டில் நான்காவதாகத் தொழிற்படத் தொடங்கிற்று. 1953, 54-ஆம் ஆண்டுகளில் சென்னை மின்சார நிலையம் விரிவாக்கப்பெற்று மதுரை நிலையத்துடன் இணைக்கப் பெற்றது. 1954-ல் பைகாரா நீர் மின்சார நிலையம் மூன்றாவது அமைப்பாக அதிக சக்தியை உற்பத்தி செய்யும் நிலையை அடைந்தது. 1955-ல் சென்னை நிலையச் சக்தியும் பெருகிற்று; 1958-ல் அதன் எல்லையும் சக்தியும் இன்னும் விரிவடைந்தது. 1958-ல், பெரியாறு நீர் மின்சார நிலையம் தொழிற்படத் தொடங்கிற்று. தற்போது குந்தா மின்சாரத் திட்டம் நாட்டு மின்சார திட்டத்துடன் இணைக்கப் பெறுகின்றது. அதன். முழு ஆக்கமும் இன்னும் நிறைவு பெறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/242&oldid=1382316" இலிருந்து மீள்விக்கப்பட்டது