பக்கம்:தொழில் வளம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

தொழில் வளம்


நாட்டின் பெருந்தொழில்கள் இயங்குவதற்குப் பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமா உடையவர்கள் மட்டும் போதாது. பிட்டர், வெல்டர் போன்ற பல்வேறு வகைப்பணியாளர்களும் தேவை. இந்த ரகத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான நிலையங்களும் நம் மாநிலத்தில் பல இயங்கி வருகின்றன. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு 768 நபர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய வசதி இந்தப் பயிற்சி நிலையங்களில் இருந்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் மேலும் 2,400 பேருக்குப் பயிற்சி அளிப்பதற்கான அளவிற்கு நிலையங்கள் திறக்கப்பட்டன. இதைத் தவிர்த்துத் தனியார் நடத்தும் தொழிற்சாலைகளில் 305 பேர் தொழில் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தொழிலாளர்கள் ஓய்வு நேரங்களில் பயிற்சி பெற்றுத் தங்களுடைய அறிவையும் திறமையையும் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்காக, மாலை வேலைகளில் நடைபெறும் இரண்டு பயிற்சி நிலையங்களும் திறக்கப்பட்டு இருக்கின்றன. இவைகளில் 400 பேர் பயிற்சி பெற இடமுள்ளது. இந்தத் தொழில் பயிற்சித் திட்டங்களுக்காக இரண்டாவது திட்டக் காலத்தில் 97 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. மூன்றாவது திட்டக் காலத்தில் இவ் வகையில் 325 கோடி ரூபாய் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். மேலும் 14 தொழில் பயிற்சி நிலையங்கள் ஏற்பாடு செய்து அவைகளில் 3500 பேருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு வகை செய்யப்படும். மாலை வேலைகளில் பயிற்சி கொடுக்கும் நிலையங்கள் மேலும் இரண்டு திறக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/275&oldid=1382076" இலிருந்து மீள்விக்கப்பட்டது