பக்கம்:தொழில் வளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

தொழில் வளம்


ஒன்றும் அமைக்கப்பட வில்லை. தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கேற்ப ரயில் வசதியும் பெருக வேண்டியது அவசியமென்பதைப் பற்றி யாரும் மறுக்க முடியாது. அதிலும் முக்கியமாக நெய்வேலியில் ஏற்படக்கூடிய தொழில் வளத்தை நல்ல முறையிலே பயன்படுத்த வேண்டுமென்று சொன்னால் அதைப் பல பாகங்களுடன் இணைக்கக்கூடிய முறையில் புதிய ரயில் பாதைகள் அமைத்தாக வேண்டும். ஆகவேதான், சேலம்-பெங்களுர் ரயில் பாதையை அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்திவந்திருக்கின்றாேம். இன்னும் சில புதிய ரயில் பாதைகள் ஆங்காங்குத் தேவைப்படுகின்றன. மூன்றாவது திட்டக் காலத்தில் மிகவும் அவசியமான ரயில் பாதைகளையாவது உடனடியாக அமைக்க முன்வர வேண்டுமென்று மத்திய சர்க்காரைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

தொழில் வளப் பெருக்கத்திற்கு ரயில் பாதைகளோடு மட்டுமல்லாமல் சாலை வசதிகளும் பெரிய அளவில் அமைய வேண்டியது அவசியம். சில நாடுகளில் ரயில் பாதையைவிட சாலை அமைப்புகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. நமது மாநிலத்தில் சென்ற பத்தாண்டுகளில் சாலைகள் அமைப்பதில் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கின்றாேம். தமிழ்நாட்டில் நல்ல சாலை வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். முதல் திட்டத் தொடக்க காலத்தில் நம் மாநிலத்தில் 6,800 மைல் கிராமச் சாலைகளும். 14,400 மைல் நீளமுள்ள மற்றச் சாலைகளும் இருந்தன. முதல் திட்டக் காலத்தில் 1,643 மைல் கப்பிச் சாலைகளாக மாற்றப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/281&oldid=1399830" இலிருந்து மீள்விக்கப்பட்டது