பக்கம்:தொழில் வளம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

287


இல்லையானால் நாட்டில் பொருள் பெருக்கம் வளராது. என்னதான் தேவையிருந்தாலும் தேவைப் பொருள்கள் நெடுந்தொலைவுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தாலும் அவற்றைத் தேவையானவர் கையில் சேர்க்க இடையில் பலர் தேவைப்படுகின்றனர். அவர்களே வணிகராவர். அவ்வணிகர் திறனும் தொழில் வளத்துக்கு இன்றியமையாததாகின்றது. அவ்வணிகர் பொருள்களை உற்பத்திச் சாலையிலிருந்து பல்வேறு வகைகளில் கொண்டு சென்று அவற்றின் சிறப்பியல்புகளை மக்களுக்கு உணர்த்தி விளக்கி, அவற்றை விற்பனை செய்வர். இன்று வாணிபத்துக்கு விளம்பரமும சிறந்த சாதனமாக அமைந்துள்ளது. எனவே வாணிபமும் விளம்பரமும் இன்றைய தொழில் வளத்துக்கு இரு கண்களென அமைந்துள்ளன.

ஒன்றைக் கொடுத்து மற்றாென்றைப் பெறுதலே வாணிபம் இவ்வாணிபம் நேற்று இன்று ஏற்பட்டதன்று; தமிழ் நாட்டில் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறப்புற்றிருந்ததென்பதை முன் ஒரு பகுதியில் கண்டோம். ஆயினும் இன்று நாம் பொருள்களைக் கொள்ளும் வகையில் அன்று வாணிபம் நடந்தது என்று சொல்ல இயலாது. இன்றைக்கும் கிராம மக்களில் பலர் நாம் பயன்படுத்தும் காசுகள் இன்றியே பல பொருள்களைப் பண்டமாற்றுச் செய்து கொள்ளுகின்றனர். அரிசியிட்டுக் கரிவேப்பிலை வாங்குவதும் நெல் இட்டுத் தயிர்கொள்வதும் கிராம மக்களிடை நாள் தோறும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளே. அதைப் பண்டமாற்று வாணிபம் என்பர்.

“கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/290&oldid=1381650" இலிருந்து மீள்விக்கப்பட்டது