பக்கம்:தொழில் வளம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தொழில் வளம்


என்று விடுதலைக் கவிஞர் பாரதியார் கூட இப்பண்ட மாற்று வாணிபத்தைக் குறிக்கிறார். தத்தமிடம் மிகுதியாக உள்ள பொருளைக் கொடுத்துத் தமக்குத் தேவையான பொருளைப் பெற்றுக் கொள்ளும் இவ்வழக்கமே பண்டைக்கால வழக்கம்.

இப்பண்டமாற்று வாணிபத்தைச் சாதாரணப் பொருள்களல்லாது காதல் நெறியினும் கடவுள் நெறியினும் கூடப் போற்றிவந்தார்கள் எனக் காண்கின்றோம். தலைவன் தலைவியர் இருவரும் ஒருவர் மற்றவருக்குத் தம்மைக் கொடுக்கக் கடமைப்பட்டவராவர். ‘இருவரும் மாறிப்புக்கு இதயமெய்தினர்’ என்பர் கம்பர். அவ்வாறு ஒருவரை ஒருவர் முற்றத்தந்து மாறிக் கொள்வதிலேயே உண்மை இன்பமாகிய காதல் நன்கு சிறக்கும். இதையே வள்ளுவர்,

‘சாயலும் நானும் அவர் கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து’ (குறள் 1183)

என்று தலைவனைப் பிரிந்த தலைவியின்மேல் வைத்துக் காட்டுகின்றார். கடவுளைப் பாட வந்த மாணிக்க வாசகர் இதே நிலையில் பண்டமாற்று வாணிபத்தைக் குறித்துத் தாமும் இறைவனும் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொண்டதைக் காட்டி, அப்பண்டமாற்று வியாபாரத்தில் தாமே லாபம் பெற்றவர் என்பதையும் குறிக்கின்றார்.

‘தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
  சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

  யாதுநீ பெற்றதொன் றென்பால்?’

என்பது திருவாசகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/291&oldid=1381669" இலிருந்து மீள்விக்கப்பட்டது