பக்கம்:தொழில் வளம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

தொழில் வளம்


களாலும், வள்ளுவர் குறித்த ‘மாடு’ போன்ற செல்வ வளங்களாலும் பிறநாடுகளுடன் தத்தம் பொருளாதார உயர்வைப் பெருக்கி ஓங்குகின்றன.

வேறு சில நாடுகள் வாணிபத்தால் வளம் கொழிக்கும் நாடுகளாகிப் பொருளாதார ஏற்றமுறுகின்றன. மேலே நாடுகளில் பல இத்துறையில் முன்னேறினவையே. வாணிபத்தின் உயர்வை உணர்ந்த பழந்தமிழ்நாட்டினர், ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்று கூறி வந்தனர். மணிமேகலை, சிலம்புக் காலக் தொடங்கிக் கடல் மேல் கலஞ்செலுத்தி வாணிப வளனைப் பெருக்கிய வல்லவர் பலர்தம் வரலாறுகளைத் தமிழ் இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றனவே! இன்றும் இந்திய நாடுவந்து வாணிபத்தால் வளம் பெற்ற மேலை நாட்டவரைக் காண்கின்றாேமே. போர்ச்சுகலும் பிரான்சும் டச்சும் பிரிட்டனும் வாணிப வளனைப் பெருக்கத்தானே போட்டியிட்டுக் கொண்டு இந்திய மண்ணில் கால் வைத்தன. அவ்வாணிப முறையினால் நடந்த மாறுபாடுகளும் போர்களும் எத்தனை எத்தனை? இந்த அமைதியான உலகச் சூழ்நிலையிலும் வாணிபவளம் கருதி நாட்டுக்கு நாடு எவ்வளவு மாறுபடுகின்றது. ஆங்கில நாடு வாணிபத்தின் பொருட்டு வந்து, தன் வாணிபத்தை எல்லையற்றுப் பெருக்கி, அதே அடிப்படையிலன்றாே பரந்த பாரதத்தைத் தன் அடிக்கீழ் கொண்டது. அவர்தம் வாணிபவளனுக்குப் பெருஞ்சந்தையாகப் பாரதத்தைக் கொண்ட கொடுமை கருதியன்றாே, ‘கதர் கைராட்டை இயக்கமும்’ ‘அன்னியத் துணி பகிஷ்கார இயக்கமும்’ பிறவும் நாட்டில் தேவையாக இருந்தன. எனவே வாணிபத்தாலும் செல்வவளன் பெருக்க வாய்ப்பு உண்டு என்பதற்கு நம் நாட்டு வரலாறே நமக்குச் சான்று தருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/329&oldid=1382240" இலிருந்து மீள்விக்கப்பட்டது