பக்கம்:தொழில் வளம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

327



ஆங்கில நாட்டைப் போன்றே உலகில் வேறுசில நாடுகளும் வாணிபத்தால் பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளன. இவை இரண்டு நிலையாலன்றி, இவற்றோடு இணைத்தும் இவற்றின் மேம்பட்டும் நிற்பதே இங்கே நாம் கண்டு வந்த தொழில் வளம். ஆம்! இருபதாம் நூற்றாண்டின் பொருளாதாரம் பெரும்பாலும் தொழில் வளத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதிலும் சிறப்பாக நம் பாரதநாடு இந்த அடிப்படையிலேயே தன் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. பிற இயற்கை வளமும் வாணிபப் பொருள் வளமும் ஓரளவு நாட்டில் இருந்த போதிலும், உலக நாடுகளோடு சமமாக வள்ளுவர் காட்டியபடி ஒத்து ஓங்கி உயரவேண்டுமானால், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொழிலியல் அடிப்படையிலேயே வளர வேண்டும். இந்த உண்மையை உணர்ந்துதான் உரிமை பெற்ற பின்பும் அதற்கு முன்னும் இந்நாட்டில் தொழில் வளர்க்கத்தக்க பல அடிப்படைகள் ஆராயப் பெற்றன. அவற்றையெல்லாம் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் விரித்தும் அவ்வத் துறையில் வல்ல ஆய்வாளர் பலர் ஆங்கிலத்தில் நூல்களை எழுதியுள்ளனர். அவை அனைத்தையும் ஈண்டுக் குறிப்பதோ அல்லது விளக்குவதோ இயலாது: தேவையுமன்று. எனவே ஒரு சில மட்டும் கண்டு அமையலாம் என எண்ணுகின்றேன்

இந்தியா நாடு தொழில் வளத்தாலேயே உயர்வைத் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் என்ற உண்மையைப் பல ஆண்டுகளுக்கு முன்பே, நாட்டின் நலங்காண விரும்பிய நல்வவர்கள் உணர்ந்து கொண்டார்கள். நாட்டின் பொருளாதார நிலையைக் கணக்கிடுவதற்குச் சிறந்த வழி தனி மனிதர் வாழ்வைக் கணக்கிடுவதே-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/330&oldid=1381965" இலிருந்து மீள்விக்கப்பட்டது