பக்கம்:தொழில் வளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தொழில் வளம்


அவர்களும் அவர்தம் குழந்தைகளும் சேர்ந்து குடும்பமாயிற்று. அத்துடன் பக்கத்திலும் அண்டையிலும் மற்றவர்களையும் சேர்த்து வரிசையாக வீடுகளை அமைத்துக்கொண்டு ஊர் அமைத்துச் சமூகமாக வாழக் கற்றுக்கொண்ட காலமும், அதுவேயாகும். அந்தக் காலத்தில் அவன் சமூக வாழ்விற்கு வேண்டிய பல்வேறு தொழில்களைக் கற்றுக்கொண்டவனாயிருக்க வேண்டும். சாலை அமைத்தலும் சோலை வளர்த்தலும் அவன் தொடங்கிய தொழில்கள் அல்லவா! அத் துடன் அக்காலத்திலேயே அவன் பயிர்த் தொழிலையும் கற்றுக்கொண்டவனாதல் வேண்டும். பயிர்த் தொழிலே அவன் வாழ்வில் அவனைப் பண்பட்டவனாக்கியதோடு பல தொழில் வல்லவனாக்கிக் கூட்டு வாழ்வில் அவனைப் செம்மைப்படுத்தியதாகவும் ஆதல் வேண்டும். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று பாரதி உழவையும் தொழிலையும் இணைத்தே சொல்லியதில் நல்ல கருத்து உண்டு. இன்று புறத்தோற்றத்தில் பெருந் தொழில்களுக்கும் உழவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதுபோன்ற உணர்வு இருந்த போதிலும் ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் தொடர்பு விளங்காமல் போகாது. திருவள்ளுவனார் கூறிய ‘சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்’ என்ற மேலான பொய்யாமொழி இரண்டாம் நூற்றாண்டுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் மட்டுமன்றி மனித இனம் உள்ள அளவும் மெய்யாக வாழ்வில் உள்ள ஒன்றாகும். எத்துணைத் தொழில்வளம் மிகினும், உழவு சிறந்து விளைவுள் பெருகவில்லையானால்-அதன் வழி உணவு முட்டுப்படுமானால்-ஆலைத் தொழிலாளியின் வாழ்வெங்கே? திறன் எங்கே? செயல் எங்கே ? ஒருவேளை ‘படி’ கூட்டிக் கணக்கிடலாம். எனினும் அந்தக் கணக்கெல்லாம் உழவு வழிக் காணும் உணவுப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/33&oldid=1381382" இலிருந்து மீள்விக்கப்பட்டது