பக்கம்:தொழில் வளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

41


யாகவே உள்ளது. எனவே அவை வாழ்வின் தேவை தாம் என்று யாரும் சொல்லமாட்டார்களே. மனிதன் வாழ்வின் தேவையை எல்லையற்றுத் தன்னை மறந்து பெருக்கிக்கொண்டதன் விளைவோ இது என்று அஞ்சக் கூடிய வகையில் இன்றைய உலக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நல்லவர்கள் அந்த அழிவுச் சக்திகளை மடித்து மறைத்து ஒழிக்கவேண்டும் என்கின்றனர். ஆம். இன்றைய சமுதாயத்தின் தேவை அந்த அழிக்கும் சக்திகளை அழிப்பதேயாகும். ஆதி மனிதன் தன்னை வாழவைக்கும் சத்தியை உருவாக்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் திறனில் தன்னை வளர்த்தான். இடைக்கால மனிதனும் அதே எண்ணத்தில் உலகை வாழவைக்கும் எண்ணற்ற தொழிற்சாலைகளை உண்டாக்கி வளர்த்து உலக சமுதாயத்தை வாழவைத்தான், ஆனால்-இன்றைய மனிதன்-இருபதாம் நூற்றாண்டில் செல்லும் நாகரிகத்தில் வல்லவனாகிய மனிதன் மனித சமுதாயத்தை மட்டுமன்றி உயிர்ச் சமுதாயத்தை அழிப்பதையே தன் வாழ்வின் தேவையாகக் கொண்டு அதற்கேற்ற தொழிற்சாலைகளை உலகெங்கணும் உண்டாக்கிக்கொண்டிருக்கிறான்! கடவுளைப்பற்றிக் கூறுபவர் யுகாந்த காலத்தில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் உலக அரங்கில் சம்மாரமூர்த்தியாக உருவு கொண்டு ஆடல்புரிவான் என்பர். அந்த நாள் தான் இன்று வந்துவிட்டதோ என்று எண்ணுமாறு உலகச் செயல்கள் செல்லுகின்றன. ஆண்டவன் உண்மையில் அப்படியே வந்தாலும் உயிர்களின் நலன் கருதி அவற்றைக் காத்தே மாற்றுப் பொருள்களை அழிப்பான் என்பர் ; அதையே ‘துட்டநிக்கிர சிட்ட பரிபாலனம்’ எனவும் கூறுவர். ஆனால் இன்றைய மனிதன் தான் உட்பட அனைவரையுமே அழிக்கும் தேவையை நாடுகிறான். இதைத் தவறு என உணர்கின்றவர்களும் காட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/44&oldid=1381423" இலிருந்து மீள்விக்கப்பட்டது