பக்கம்:தொழில் வளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு முன்னாளில் தொழில் வளம்

63



கொண்டே இருந்தன என்பது தேற்றம். மிகப் பழங் காலத்தில் உண்டான் மீன் பிடித்தல் போன்ற உணவுப் பொருள் பெருக்கும் தொழில், மேலை நாட்டார் வந்த பிறகு பல வழிகளில் நன்கு வளரத் தொடங்கிற்று. கட்டடக்கலை பற்றிய தொழிலும் மங்கவில்லை. மதுரைத் திருமலை நாயகர் மண்டபத்தையும் தஞ்சைக் கோட்டையும் அக்காலத்தில் தோன்றிய பிற கட்டடங்களையும் கல்லணை போன்ற திண்ணிய அணைகளையும் பிற கைவண்ணப் பணிகளையும் பார்க்கும் போது தமிழ் நாடு எத்தனை வகையில் அரசியல் மாற்றம் பெற்ற போதிலும் உழவிலும் தொழிலிலும் ஓரளவு நிலை குலையாது வளர்ந்து வருவது உண்மையன்றாே!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் பிற பாகங்களைக் காட்டிலும் தமிழ் நாடு பல் வகையில் தொழில் துறையிலும், கல்வி கலை முதலியவற்றிலும் முன்னேறியுள்ளது. இன்றும் இந்திய நாட்டுப் பல பெருந் தொழிற்சாலைகளிலும் மின்சார நிலையங்களிலும் நீர்த்தேக்க அலுவலகங்களிலும் பல தமிழ்ப் பொறியாளர்கள் தம் திறம் காட்டிப் பணிபுரிவதைக் காண்கிறோ மல்லுமோ! இவ்வாறு மிகப் பழங் காலந் தொட்டுத் தன் தொழில் வளத்தையும் கலை நலத்தையும் பயிர் வளத்தையும் மங்காது போற்றிக் காத்த தமிழ் நாடு உரிமை பெற்ற பின்பும் அதே நிலையில் குறையாத வகையில் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றது என்பது இன்று நாம் காணும் காட்சி. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் நாட்டுத் தொழில் வளம் பெற்ற வகையினை நன்கு பகுத்துக் காண்பதோடு வருங் காலத்துக்கு வேண்டிய ஆக்கப் பணிக்கு வழி கோல வேண்டிய பொறுப்பும் நம்முடையது என்பதை நினைவில் கொண்டு மேலே செல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/66&oldid=1399620" இலிருந்து மீள்விக்கப்பட்டது