பக்கம்:தொழில் வளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு இன்றும்-நாளையும்

81


நாட்டு மக்களாலேயே வேற்றுக் கண்ணோடு நோக்கப் பெற்றுப் பிடர்பிடித்துத் தள்ளப்பட்டுத் தமிழ்நாடு வந்து சேரும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் எந்த வேலையினையும் ஏற்றுத் திறம்பட முடிக்கத் தயாராக உள்ளனர். ஊராருக்கெல்லாம் உழைத்து உழைத்து ஓட்டாண்டியாகிய தமிழ்ச் சமுதாயம் தன்னாட்டை வளம்படுத்தத் தயங்காது என்பது உண்மை. எனவே தமிழ்நாட்டு அரசாங்கத்தார் ஒல்லும் வகையெல்லாம் முயன்று திட்டகாலங்களில் ஒதுக்கும் தொகையில் உரிய பங்கைப் பெறுவதோடு பெருந் தொழிற்சாலைகள் பலவற்றை இங்கே நிறுவத்தக்க வாய்ப்புகளையும் மத்திய அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு அரசாங்கம் அந்தப் பணியில் தவறவில்லை என்பதை உணர்வோம். எனினும் ‘சுடர் விளக்காயினும் நன்றாய் விளக்கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்’ என்ற அடிப்படையிலேயே இதை நான் இங்கே குறிக்கின்றேன். இதுவரையில் முயன்றது போன்றே இனியும் தமிழ்நாட்டு அரசாங்கம் முயன்று அடுத்துவரும் திட்டகாலங்களில்— சிறப்பாக அடுத்த பத்தாண்டுகளில் எத்தனை பெருந்தொழில் சிறு தொழில்களை நாட்டில்—தமிழ் மண்ணில்-வளர்க்க முடியுமோ அத்தனைக்கும் வழிகோலவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன். 1976ல்–நான்காவது, ஐந்தாவது திட்டமுடிவுக் காலத்தில்—தமிழ்நாடு பொன்கொழிக்கும் பூமியாக–தன் நிறைவினை எல்லாத் துறையிலும் பெற்ற அங்கநாடாக—செயல்திறத்தைச் செம்மையாகச் செய்து வெற்றிகண்ட நாடாக—விளங்கும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதியை முடிக்கின்றேன்.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/84&oldid=1381455" இலிருந்து மீள்விக்கப்பட்டது