பக்கம்:தொழில் வளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உற்பத்தித் திறனும் வாழ்க்கைத்தரமும்

85


திக்குத் தேவையான வளங்களை, அவைகளுக்காகும் அடக்கச் செலவைப் பொருட்படுத்தாமல் அதிகமான ஆட்களை வைத்தும், இயந்திரங்களை நிறுவியும் அளவு கடந்த பொருள்களைப் போட்டும் உற்பத்தியைப் பெருக்க முடியும். இது ஒரு வழி மற்ற ஒரு வழி, இருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டே வீணாகும் அளவைப் பல விதங்களால் குறைத்து விளைவின் அளவை அதிகப்படுத்துதல். இம் முறையில் நட்டம் குறைந்து, அடக்கச் செலவும் குறைகிறது. முன்னைய வழியைவிட இரண்டாவது வழியே இலாபகரமானது. உற்பத்தி என்பது விளைவின் அளவை மட்டுமே குறிப்பதாகும். உற்பத்தித் திறன் என்பது விளைவின் அளவுக்கும் அதற்காகச் செலவிட்ட வளங்களின் அல்லது வசதிகளின் அளவிற்கும் உள்ள விகிதம், உற்பத்தி அதிகமாவதால் உற்பத்தித்திறன் அதிகமாகவேண்டும் என்று இல்லை. ஆனால் உற்பத்தித் திறன் அதிகமாவதால் நிச்சயமாக உற்பத்தி அதிகமாகிறது. இதை ஓர் உதாரணத்தால் விளக்கலாம். ஓர் தொழிற்சாலையில் வேலை செய்யும் 100 ஆட்கள், அதைப்போன்ற மற்றொரு தொழிற்சாலையில் பணியாற்றும் 125 ஆட்களால் ஆகக்கூடிய பொருள்களை அதே கால அளவில் அதே அளவு வசதிகளைக் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள் எனக் கொள்வோம். இந்நிலையில் இரண்டு தொழிற்சாலைகளின் உற்பத்தி அல்லது விளைவின் அளவுகள் ஒன்றுதான். ஆனால் முன்னதின் உற்பத்தித்திறன் பின்னதின் உற்பத்தித்திறனை விட அதிகம் ஆகின்றது. இவ்வாறு ஒவ்வொரு சூழ்நிலையிலும் உற்பத்தித்திறன் அதிகமாகும்போது அவ்விடத்திய அல்லது சமூகத்தின் வாழ்க்கை தரம் எவ்வாறு உயருகிறது எனக் கீழே காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/88&oldid=1381470" இலிருந்து மீள்விக்கப்பட்டது