பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 119

 தோடு சொத்தும், வீடுகளும், பங்களாவும் வந்து சேர்ந்தன. இது போன்ற வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கப் பெறுகிறவர்கள் 'ஷோக்சுந்தரர்'களாகவும் 'ஜில்ஜில் மைனர்'களாகவும் நாளோட்டுவதில் ஆர்வம் காட்டுவது இயல்பு. இப்படிப்பட்ட 'பிள்ளையாண்டான்'களுக்கு நகைகள் காய்த்துத் தொங்குகிற மரங்கள் போன்ற-சொத்து பத்து உடைய சதை மூட்டைகளான அல்லது நோய் பற்றிய எலும்புக் கூடுகளான - பெரிய இடத்துப் பெண்களில் ஒருத்தி மனைவியாக வந்து சேருவதும் சம்பிரதாயம் தான்.

ராஜப்பாவுக்குப் பெண் கொடுப்பதுக்கென்று பெரிய இடங்கள் பல தேடி வந்தன.

நமக்கும் கல்யாணத்துக்கும் தோட்டம் துர!” என்று சொல்லி அனைவரையும் ஒதுக்கிவிட்டார் அவர், வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க வேண்டியது தான் முக்கியம். ஐயாவாள் கல்யாணம் இல்லாமலே சந்தோஷமா இருக்க முடியுது. பின்னே என்னத்துக்கு கால்கட்டும், பொறுப்புகளும், பிச்சுப்பிடுங்கல்களும்!” என்று அவர் அடிக்கடி சொல்லலானார். ஆகவே, கல்யாணம் அவரை விட்டு ஒதுங்கிப் போய்விட்டது.

சைக்கிள், மோட்டார்பைக், அருமையான கார் எல்லாம் அவரிடம் இருந்தன. இவை போதாதென்று 'இரட்டைக் குதிரை சாரட்டு' ஒன்றும், ஜோரான ஜட்கா வண்டியும், கம்பீரமும் அழகும் எடுப்பும் மிடுக்கும் நிறைந்த மணியான குதிரைகளும் அவர் வைத்திருந்தார். அவற்றை எல்லாம் மெருகு குலையாத மினுமினுவெனப் பாதுகாத்து வருவதற்காக தனித்தனி ஆட்களும் ஏற்பாடு செய்திருந்தார்.