பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120வல்லிக்கண்ணன்

 ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றிலே உல்லாசமாக சவாரி செய்து திருநகரின் தெருக்களைச் சுற்றி வருவது ராஜப்பாவின் பொழுதுபோக்கு ஆகவும், வேலையாகவும் இருந்தது. மாலை வேளைகளில் மெதுவாக நடந்தும் ரதவீதிகளைச் சுற்றுவார். அவருடைய சித்தம் எந்த வேளையில் எந்தப் போக்கு போகும் என்று எவராலும் சொல்ல இயலாது.

ஒரு காலத்தில் தலைமுடியை நீள வளர்த்து கொண்டை போட்டு'த் திரிந்த ராஜப்பா, பிறகு நாடகக் கலை இளவரசுகளும், நாடக ராஜாக்களும் செய்து வந்தது போல் கழுத்து வரை தொங்குமபடியாக முடியை வெட்டி விட்டிருந்தார். பிறகு, அவரது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நாடக உலக அண்ணாச்சி ஒருவர் அழகான கிராப் வைத்துக் கொள்ளவும், இவரும் அவர் காட்டிய பாதையில் முன்னேறினார்.

இதெல்லாம் திருநகர் மக்களுக்கு வேடிக்கையாகவும் பேச்சுக்கு உரிய ரசமான விஷயமாகவும் அமைந்தன. அனைத்தினும் மேலாக, அவருடைய உடை அலங்காரக் கோலாகலங்கள்தான் ரொம்ப ரொம்ப கவனிப்புக்கு உரியனவாக மிளிர்ந்தன.

விதம் விதமான டிரஸ்கள் அணிந்தார் ராஜப்பா. நாடக மேடையில் பிரதான பாத்திரங்கள் எடுப்பாகவும் ஜோராகவும், பகட்டாகவும் பளபளப்பாகவம், ஸ்டைலாகவும் ஆடைகள் அணிந்து மினுக்குவது போல, அவர் வாழ்க்கை நாடகத்தில் உல்லாசமாகத் திகழும் நடிகராக நடந்து கொண்டார். மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதையோ, பிரமிப்பதை அல்லது பரிகசிப்பதையோ வியப்பதை அல்லது ரசிப்பதையோ அவர் பொருட் படுத்தவில்லை.

"அந்தக் காலத்து ராஜாக்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் எல்லாம் தங்கள் இஷ்டம் போல், விதம்