பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்121

 விதமாக ஆடை அணிகள் உடுத்து உல்லாசமாக வாழ வில்லையா என்ன? இப்படி எல்லாம் டிரஸ் செய்து கொள்வது எனக்கு சந்தோஷம் தருகிறது. எனக்கு என் சந்தோஷம்தான் முக்கியம்’' என்று அவர் அடித்துச் சொன்னார், அப்புறம் அவரிடம் யார் பேசுவார்கள்?

திருநகரில் எப்போதாவது முகாமிடும் நாடகசபையின் நித்திய, நிரந்தர ஆதரவாளர் ராஜப்பா. நாடகத்தில் பெயர் பெற்ற நடிகர்கள் பலருக்கும் அவர் நண்பர். தனக்கு வேண்டிய நடிகர்களின் உபயோகத்துக்காக அவர் தனது காரை, சாரட்டை, ஜட்காவை உதவத் தயங்குவதில்லை பெயர் பெற்ற நடிகர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரிப்பவர்களின் முன்னிலையில் அவரும் இருந்தார். அவர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டு, அவற்றைப் பெரிதுபண்ணி, வீட்டுச் சுவர்களில் மாட்டி அகமகிழ்ந்தார் அவர்.

ராஜப்பாவின் செயல்களுக்கு அடிப்படையாக ஒரு லட்சியம் இருந்தது என்பது ஒருநாள் திருநகர் மக்களுக்குப் புரிந்தது.

ராஜப்பா சினிமா நடிகர் ஆகிப் புகழ்பெற விரும்பினார்.

அவருடைய நட்புக்கும், வியப்புக்கும் இலக்காயிருந்த நாடகக்கலை மன்னர்கள் சினிமா உலகத்தில் புகுந்து, சிறிதாகவோ, பெரிதாகவோ தங்களுக்கு என்று ஒவ்வொரு இடம் பிடித்துக் கொண்டார்கள் என அறிந்தது முதல் ராஜப்பாவின் இந்த ஆசை அதிகரித்து விட்டது.

சினிமாமோகம் அவரையும் பிடித்து ஆட்டியது.

திரைப்படம் தயாரிக்கும் பிரபலமான நிறுவனங்களுக்கெல்லாம். ராஜப்பா கடிதங்கள் எழுதினார்.