பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 185



விட்டுருவனா’ ன்னு கறுவிக்கிட்டு அவ ஓடி, ஒருமட்டும் அந்தப் பழத்தை எட்டிப் புடிச்சு, கஷ்டப்பட்டு தூக்கி எடுத்து, புள்ளையை அணைக்கிற மாதிரி உடம்போடு சேர்த்து அமுக்கினா. அப்பதான் அவளுக்கு புள்ளை ஞாபகம் வந்தது.

“புள்ளையோட அழுகைச் சத்தமும் காதிலே விழுந்தது. தண்ணியிலே அது உருண்டுக்கிட்டு வர்றதும் கண்ணிலே பட்டுது. அடி ,பாவி மட்டை-பாதகத்தி கெடுத்தேனே கேட்டை! எம் பிள்ளை தண்ணியோடுல்லா போகுதுன்னுட்டு, அவ கையிலிருந்த பலாப்பழத்தை அவசரம் அவசரமா கரையிலே வச்சிட்டு புள்ணெயைப் புடிக்க ஓடினா. தண்ணிதான் வேகமா ஓடுதே, அது புள்ளையை இழுத்துக்கிட்டு வேகமாகப் போகுது. அவ ஓட ஓட புள்ளையோடு தண்ணியும் ஓடுது. மேட்டிலேயிருந்து பள்ளத்திலே விழற இடத்திலே புள்ளையும் தண்ணியோடு சேர்ந்து விழுந்து, ஆழத்திலே முங்கி முங்கி அலைக்கழிஞ்சு, அவுட்டாயிட்டுது.

“அவ தலையிலே, தலையிலே அடிச்சுக்கிட்டு அலறுதா. இதுக்குள்ளே அவ கரையிலே வச்ச பலாப் பழமும் உருண்டு தண்ணியிலே விழுந்து, ஓடைத் தண்ணி அதையும் அடிச்சுக்கிட்டுப் போயிட்டுது. பயித்தியாரி வாயிலேயும், வயித்துலேயும், தலையிலேயும் ஓங்கி ஓங்கி அடிச்சுக்கிட்டு ‘லபோ லபோ’ன்னு கத்துனா. கத்தி என்ன பிரயோசனம்? வழியோடு போனவங்க வந்தவங்க நின்னு விசாரிச்சாங்க. அந்தக் கூறுகெட்ட மூளியின் செயல் அம்பலமாச்சு. இது வாய் வழிச் செய்தியா பரவிப் பரவி, அந்த ஓடைக்கு ஒரு அடையாளமாக, ஓடையின் பெயரா நிலைச்சு நின்னிட்டுது!” என்று அண்ணாச்சி விளக்கினார்.

“அதனாலதான் நான் சொல்லுதேன், அசட்டுத் தனமான காரியங்களை செய்தாலும், நிலையான