பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ★ வல்லிக்கண்ணன்

விடுவார் சுந்தரமூர்த்தி. வீட்டில் வந்து கணக்குப் பார்க்கையில் காசுகள் குறையும் செல்லாத நாணயங்கள் கிழிந்த நோட்டுகள் இருக்கும். அதற்காக அவர் மனைவி சண்டை பிடிப்பாள்.

ஏதாவது சாமான் வாங்க, அல்லது ஏதோ முக்கிய விஷயமாக, அவர் கிளம்பிப் போவார். வழியில், ரொம்பவும் வேண்டியவர் எவராவது எதிர்ப்பட்டு விடுவார். அவரோடு அந்த இடத்திலேயே நின்று, புத்தகங்கள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் பற்றி ஆர்வமாகப் பேசத் தொடங்கி விடுவார். நேரம் போவதே தெரியாது. பிறகு வீட்டுக்குத் திரும்புவார்.

மனைவி விசாரிக்கும்போதோ அல்லது வெகுநேரம் கழித்துத் தானாகவோ, அடடா, மறந்தே போனேனே? என்று அந்த முக்கிய காரியம் அவருக்கு நினைப்பு வரும். வருத்தமும் மனசில் எழும். என்ன செய்வது! அவருக்கு மறதி அதிகம்.

அன்றும் வழக்கம்போல் சுந்தரமூர்த்தி ஒரு பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.

“என்னய்யா, எப்படி இருக்கிறீர்?” என்று கேட்டபடி, அவருக்கு வேண்டியவர் ஒருவர் வந்து சேர்ந்தார்.

நமசிவாயம் என்று பெயர். கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், அபூர்வமாக என்றைக்காவது ஒருநாள் வருவர். வந்தால், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்.

அவர் சுந்தரமூர்த்தி கருத்துக்களை மறுத்துப் பேசுவதில் உற்சாகம் காண்பவர். தீவிரமாக விவாதிப்பார். அன்றும் அப்படித்தான் நடந்தது.

நமசிவாயம் வந்ததும் சொன்னார்: