பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

விந்தன்


புறப்படுவார்கள். எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போல் முடிவேந்தன் ஒருவன் கையில் போர்வாளுடன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பான். அவன் எங்களைக் கண்டதும் அதைத் தூக்கி என்னிடம் கொடுத்து விடுவான். அவ்வளவுதான்: ‘வீழ்ந்தது முடியாட்சி; எழுந்தது குடியாட்சி! திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று நான் முழங்குவேன். என்னைத் தொடர்ந்து, ‘திராவிட நாடு வாழ்க திராவிட நாடு வாழ்க!’ என்று எல்லாரும் முழங்குவார்கள். திருச்சி, தஞ்சை இந்தப் பக்கமெல்லாம் வெற்றி முரசும், வீர முரசும் கொட்டிய இந்த நாடகத்தைச் சென்னையிலும் நடத்திப் பார்த்து விடவேணும்னு நினைச்சார் என்.வி.என்...”

“எந்த என்.வி.என்...?”

“இப்போ தொழிலாளர் நல அமைச்சராயிருக்கிறாரே மாண்புமிகு என்.வி.நடராசன், அவரேதான். அவரும் டி.எம். பார்த்தசாரதியும்...”

“தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் எப்போது பார்த்தாலும் அண்ணாவுடன் இருப்பாரே, அந்தப் பார்த்தசாரதியா ?”

“அவரேதான்; ‘தி.மு.க வரலாறு'ன்னு ஒரு புத்தகம் எழுதி, அதற்காக எழுத்தாளர் சங்கத்தின் கேடயத்தைக் கூட வாங்கியிருக்கிறார் போலிருக்கிறதே அவர் ?”

“ஆமாமாம், தி.மு.க.வின் வளர்ச்சிக்காக முதன் முதலில் ‘மாலை மணி’ என்று ஒரு நாளிதழைத் தொடங்கி வைத்தவர் கூட அவர்தானே ? அதற்கு அண்ணாதுரை மட்டுமல்ல, கருணாநிதிகூடக் கொஞ்ச நாட்கள் ஆசிரியராயிருந்ததாக ஞாபகம்...”

“அந்தப் பார்த்தசாரதியும் என்.வி.என்.னும் இன்னும் சிலரும் திருச்சிக்கு வந்து என்னைப் பார்த்தாங்க; நாடகம் நடத்தக் கூப்பிட்டாங்க. எனக்கும் அப்போ சென்னையிலே நாடகம் போட்டா தேவலைன்னு தோணுச்சி; வந்தேன். சவுந்தரிய மகாலிலே நாடகம். இழந்த காதல், விமலா அல்லது