பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

137


விதவையின் கண்ணீ ர், லட்சுமிகாந்தன் இந்த மாதிரி நாடகங்களைப் போட்டுக்கிட்டிருத்த வரையிலே எந்த வம்பும் இல்லே; போர்வாள்’னு போட்டது தான் தாமதம், சர்க்கார் அந்த நாடகத்தை நடத்தக் கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க...”

“எந்த சர்க்கார், பிரிட்டிஷ் சர்க்காரா ?”

“அவங்க போட்டிருந்தாலும் அதிலே ஓர் அர்த்தம் இருந்திருக்கும். ஒரு பக்கம் ஜனநாயகத்தைக் கட்டி வளர்த்தாலும், இன்னொரு பக்கம் முடியாட்சியை இன்னிய வரையிலே கைவிடாம இருக்கிறவங்க அவங்க. அந்த சர்க்கார் ‘போர்வாள்’ நாடகத்தைத் தடை செய்யல்லே; அதுக்குப் பதிலா அப்போ சென்னையிலே நடந்துக்கிட்டிருந்த பிரகாசம் சர்க்கார் தடை விதிச்சது...”

“பிறகு... ?”

“அப்போதைக்கு அந்தத் தடையை மீற வேணாம்னு வேறே நாடகங்களை நடத்த ஆரம்பிச்சோம். ஏன்னா, அப்போ நாட்டு நிலவரம் நல்லாயில்லே. எங்கே பார்த்தாலும் ஒரே கம்யூனிஸ்ட் கலாட்டா, குழப்பம். பொன்மலையிலே கம்யூனிஸ்டுகளைச் சுட்டுத் தள்றாங்கன்னு ஒரே புரளி, பீதி. பிரகாசம் வேறே ஒரு கம்யூனிஸ்ட்டைக்கூட வெளியே விடாம பிடிச்சி உள்ளே தள்ளிக்கிட்டே இருந்தார். இந்தச் சமயத்திலே என்கிட்டேகூட ஒருத்தர் வந்து, ‘நீங்க டிராமா தொடங்கறதுக்கு முந்தி ஒரு திரை விடறீங்களே, அந்தத் திரையைக் கூடக் கழற்றிச் சுருட்டிக் கொஞ்ச நாள் உள்ளே வைச்சுடுங்க இல்லேன்னா, உங்களையும் கம்யூனிஸ்டுன்னு பிரகாசம் உள்ளே போட்டுட்டாலும் போட்டுடுவார்னார்...”

“அப்படி என்ன இருந்தது அந்தத் திரையிலே... ?”

“திராவிட நாடு திராவிடருக்கேன்னு இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா ? அதுதான் இல்லே; ‘உலகப் பாட்டாளி மக்களே, ஒன்றுபடுங்கள்’னு இருந்தது...”

“கம்யூனிஸ்ட் கட்சியிலும் உங்களுக்கு ஈடுபாடு உண்டா, என்ன?"