பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

விந்தன்


இன்னொருத்தனோ, ‘இந்தத் தொரப்பணம் போடத் தெரியாத பயலைக் கேளுங்க, நான் நல்ல மரமா எடுத்துக் காட்டினா, இவன்தான் அதை வேணாம்னு சொல்லிட்டான்'னான்: ஆக, மாணிக்க நாயக்கர் சொன்னது சரியாப் போச்சு. ரெண்டு பேரும் ‘யார் கெட்டிக்காரன்'கிறதிலே போட்டி போட்டுக்கிட்டதுதான் மிச்சம், காரியம் நடக்கல்லே. நாயக்கர் சொன்னார், ‘இனிமேலாவது தெரிஞ்சுக்குங்க, வழி காட்டத்தான் கெட்டிக்காரன் வேணும்; அந்த வழிப்படி காரியம் நடக்கணும்னா முட்டாளுங்கதான் வேணும்'னு. அது எனக்கு ரொம்பச் சரியாப் பட்டது. அன்னியிலேருந்துதான் எனக்குக் கெட்டிக்காரனுங்க வேணாம், முட்டாளுங்களே போதும்னு நான் சொல்லிக்கிட்டு வரேன்'ன்னார். எப்படியிருக்கிறது, கதை?”

“பிரமாதம்!”

“இந்தக் கதையை நினைவிலே வைச்சிக்கிட்டு அன்னிக்கு நடந்த மாநாட்டிலே நான் பேரறிஞர் அண்ணாவைக் கொஞ்சம் தாக்கிப் பேசிட்டேன். அவர் மேடையிலே இல்லாத சமயத்திலே மட்டுமில்லே, இருக்கிற சமயத்திலும் நான் சில சமயம் அவரைத் தாக்குவதுண்டு. என்னதான் தாக்கினாலும் அவருக்கு என் மேலே கோபம் வராது. சிரிப்புத்தான் வரும். கலைஞர் கருணாநிதி அன்னிக்கு நான் மாநாட்டிலே பேசிய பேச்சைக் கண்டிச்சி, ‘தூத்துக்குடி மாநாட்டிலே நடிகவேள் நஞ்சு கலந்தார்'னு ‘திராவிட நாடு’ ஏட்டிலே எழுதினார். நான் அதைப் பார்த்துக் கோபப்படல்லே, சந்தோஷப்பட்டேன். ஏன்னா, அதை அவர் எழுதி எத்தனையோ வருஷமாச்சு. இன்னும் அந்த வார்த்தை என் நெஞ்சிலே அப்படியே இருக்கு. காரணம்? தமிழை அவ்வளவு அழகா அவர் கையாள்ற முறைதான். எதிரிகளையும் மகிழ வைக்கிற விதத்திலே தமிழைக் கையாளும் அவருக்குத் ‘தமிழவேள்’னு பட்டம் கொடுத்தா என்னய்யா? அதைக்கூடச் சிலர் பொறுத்துக்க மாட்டேங்கிறாங்களே, அவங்களை நினைச்சாத்தான் எனக்குச் சங்கடமாயிருக்கு."