பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

விந்தன்


நான் நடிக்க மாட்டேன்’னு சொல்லிவிட்டவர். அதுக்கு மேலேதான் சம்பத் அந்த வேஷத்தைப் போட்டார். அவருக்குப் பிறகு நம்ம கணேசன் அந்த வேஷத்தைப் போட்டு, ‘சிவாஜி கணேசன்'னே பெரியார்கிட்டே பேர் வாங்கிவிட்டார். ராமச்சந்திரனுக்கு அப்போ இருந்த லட்சியமெல்லாம் உடம்பைக் கட்டுக் குலையாம வைச்சிக்கனுங்கிறதுதான். அதுக்காகச் சில விஷயங்களிலே அவர் கொஞ்சம் ரிசர்வ்டாயிருப்பார். யார் குடிச்சாலும் அவர் குடிக்கமாட்டார். இப்போ அவரும் குடிக்கிறார்னு சில பேர் என்கிட்டே வந்து சொல்றாங்க, அதை நான் நம்பல்லே. அப்படிப்பட்டவன் தேவர் சொன்னதை நம்புவேனா? என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுக்கிறதுக்கு முந்திகூட நீங்க அப்படித்தான் நினைச்சீங்க'ன்னேன்.”

“என்ன நினைத்தார், உங்களையும் தொல்லை கொடுப்பவர் என்றா ?”

“ஆமாம்; இத்தனைக்கும் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவிலே தேவர் பால் வித்துக்கிட்டிருந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். நல்ல மனுஷர்; தெய்வ பக்தி உள்ளவர். அறிவு சம்பந்தமாப் பேசறதை விட ஆத்திகம் சம்பந்தமா பேசறதுதான் அவருக்குப் பிடிக்கும். நான் பெரியார் பக்கம் இருக்கிறவன் இல்லையா ? அதாலே ஆரம்பத்தில் என்னைக் கண்டு கொஞ்சம் மிரண்டார். என்னைப் போட்டுக் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ எடுத்தப்புறம் நான் வம்புக்காரன் இல்லேங்கிறது அவருக்குப் புரிஞ்சிப் போச்சு. அதுக்கப்புறம் அவர் என்னை வைச்சிப் பல படங்கள் எடுத்தார். எடுக்கிற படத்துக்குப் பேசிய தொகையை முதலிலேயே கொடுத்துடற புரொட்யூலர் அவர் ஒருத்தர்தான். ஆனா, ‘முப்பது நாளிலே ஒரு படத்தை எடுத்து முடிக்கிறதுக்கு அவர்தான் வழிகாட்டி'ன்னு சொல்றதை மட்டும் என்னாலே ஒப்புக்க முடியறதில்லே.”

“ஏன் ?”

“அவருக்கு முந்தியே சிலர் அப்படி எடுத்து முடித்தது எனக்குத் தெரியும். அவர்களிலே ஒருத்தர் சி.வி.ராமன்..."