பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

51


உங்களுடைய ஸ்டண்ட் வேலைகளுக்கு ஈடு கொடுத்து நடித்த வில்லன் நடிகர் யார் ?”

“அவர்தான் நடிப்புக்கே முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்த நடிப்புலக மேதை எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் அவர்கள். ‘பராசக்தி'யில் நடிக்கும் போது சிவாஜி கணேசனுக்குக் கூட நடிக்கச் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.”

“அவருடைய பெயர் வெளியே தெரியவே யில்லையே!”

“எங்கே தெரிய விடறாங்க ? தெரியவிட்டா நம்ம பேரு மறைஞ்சிடுமோன்னு பயப்படறாங்க. உண்மையான கலைஞர்களுக்குத் தேவையில்லாத பயம் இது!”

“அவர்கள் தெரிய விடாவிட்டால் அவரே தெரிய வைத்துக் கொண்டு விடவேண்டியதுதானே ?

“அது நிறை குடம், தளும்பாது...

“அப்படியானால் இதுவும் ‘பிழைக்கத் தெரியாத கேஸ்’ தான் என்று சொல்லுங்கள்!”

“அப்படியும் வைச்சிக்கலாம்.”

“சரி அப்புறம் ?”

“தமாஷா வரி வந்தது...’

“அதுக்கு முன்னே தமாஷா வரி இல்லையா ?”

“இல்லே, நாங்க மதுரையிலே ‘பதி பக்தி’ நாடகம் நடத்திக்கிட்ருந்தப்போதான் தமாஷா வரி வந்தது. அப்போதெல்லாம் டாக்ஸ் கலெக்ட் பண்றவங்களுக்கு நாற்பது ரூபாதான் சம்பளம். அந்த நாற்பது ரூபா சம்பளக்காரன் வந்து நம்மைக் கணக்கு கேட்கிறதாவது, நாம் அவனுக்குப் பதில் சொல்றதாவதுன்னு அய்யர் கம்பெனியையே கலைச்சிட்டார்!”

“சரியான சுயமரியாதைக்காரராயிருந்திருப்பார் போலிருக்கிறது!"