பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

65


என்னை அடிக்க வந்துட்டாங்க. அப்பத்தான் அதுவரையிலே என்னோடு சண்டை போட்டுக்கிட்டிருந்த வண்டிக்காரன் ஒரு முஸ்லிம்னு எனக்குத் தெரிந்தது. ‘இதென்ன வம்பு, நம்மாலே இங்கே இந்து-முஸ்லிம் கலவரம் வேறே வந்துடக் கூடாதே'ன்னு நான் மெல்ல அத்தனை பேருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு நழுவிட்டேன்!”

“அதோடாவது விட்டார்களா ?”

“எங்கே விட்டாங்க ? என்ன ஆனாலும் என்னைத் தீர்த்துக் கட்றதுன்னு ஊர் முழுக்கத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு மேலே நான் அங்கே இருந்தா நல்லாயிருக்காதுன்னு ஓரியண்டல் டாக்கீஸ் வேலாயுதம் பிள்ளையும், மருதப் பிள்ளையும் சேர்ந்து என்னை அன்னிக்கு ராத்திரியே வண்டியிலே ஏத்தி, மறுபடியும் மெட்ராசுக்கே அனுப்பி வைச்சுட்டாங்க.”

“அதோடு நாகலிங்கம் செட்டியார் கம்பெனிக்குக் குட் பை; அப்படித்தானே ?”

“நானா குட் பை போட்டேன்? அவங்க இல்லே எனக்குக் குட் பை போட்டுட்டாங்க!”

“கொஞ்சம் கவுரமாயிருக்கட்டுமே என்று நான் அப்படிச் சொன்னேன்; அதைக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறீர்களே ?”

“அந்த மாதிரி கவுரவத்தையெல்லாம் ஏத்துக்கிறவன் இந்த ராதா இல்லே; அவன் வேறெ ஆளு!"