பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மொழியின் வளமை அம் மொழியின் சொற் பெருக்கத்தில் உள்ளது. அவ்வாறு சொற்பெருக்கத்தையுடைய மொழிகளுள் முதன்மையான பழமையான மொழி தமிழ்மொழி எனலாம். தமிழ்மொழி தனித்தியங்கும் இயல்புடையது, சொல்வளம் நிறைந்தது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழியின்நிலைப்பாடு சொற்களை வைத்தே கணக்கிடப்படுகிறது அந்தச் சொற்களைத் தொகுத்து பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது அகராதிகளாகும். நுட்பமிகு ஆய்வுப்பணியான அகராதிப் பணிக்கெனத் தமிழ்நாடு அரசால் துறைத்தலைமை இயக்ககமாக உருவாக்கப்பட்டுச் செயலாற்றிவரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உள்ளிட்ட பல அகராதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளது, அந்த வரிசையில் தற்போது நடைமுறைத் தமிழ் அகராதியை இவ்வியக்ககம் வெளியிடுவதால் மனம் மிக மகிழ்கிறேன். தற்போது நடைமுறையில் வழங்கப்படும் முகாமையான சொற்களையும் அவற்றிற்கான பொருள்களையும் விளக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அகராதி மொழியின் வளர்நிலையைக் காட்டும் ஆவணமாக விளங்கும் என்பது என் திண்ணமான எண்ணம். இந்த அகராதியைத் தமிழார்வலர்களும் தமிழன்பர்களும் பயன்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், இந்த அகராதியைச் சிறப்புற வெளிக்கொணர்ந்துள்ள அகரமுதலி இயக்கக இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களுக்கும் அவருக்குத் துணைநின்ற இயக்ககப் பணியாளர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளுடன், заработная (தங்கம் தென்னரசு)