பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

245



“அந்த நிபந்தனைகளை வற்புறுத்தாமலே இஸ்லாத்தைத் தழுவுகிறோம்; ஆனால், நாங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் லாத் என்னும் விக்கிரகத்தைப் பற்றி, தாங்கள் என்ன முடிவு செய்வீர்கள்?” என்று பெருமானார் அவர்களிடம் கேட்டார்கள்.

“அது உடைக்கப்படும்” என்று சொன்னார்கள் பெருமானார் அவர்கள்.

அவர்கள் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுத், “தாங்கள் அவ்வாறு செய்யப் போவது, எங்கள் கடவுளுக்குத் தெரிந்தால், எங்களுடைய நகரத்தைக் கடவுள் அழித்து விடுவார். எங்கள் பெண்களும் மிகவும் வருத்தப்படுவார்கள். ஆதலால் அவ்விக்கிரகத்தை மூன்று ஆண்டுகளுக்கு வைத்திருக்க அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.

பெருமானார் அவர்கள் அதையும் மறுத்து விட்டார்கள். பின்னர் ஓரிரண்டு ஆண்டுகள், ஒரு மாதம் என்று கேட்டார்கள்.

இஸ்லாமும், விக்கிரக வணக்கமும் ஒன்றாக இருக்க முடியாது. ஆதலால், பெருமானார் அவர்கள் அதற்கும் சம்மதிக்கவில்லை.

கடைசியாக, அக்கூட்டத்தார் பெருமானார் அவர்களிடம், “எங்கள் கையினால், விக்கிரகத்தை ஒன்றும் செய்ய மாட்டோம். தாங்கள் அதை என்ன செய்ய வேண்டுமோ, செய்து கொள்ளுங்கள். ஆனால், எங்கள் கையால், அதைச் செய்யாமால் இருப்பதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று சொன்னார்கள்.

பெருமானார், அவர்கள், அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

அதன் பின், அக்கூட்டத்தார், "தாங்கள் தொழுகை நடத்தாமல் இருப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்று கேட்டார்கள்.

தொழுகையில்லை என்றால் மார்க்கமேயில்லை என்று பெருமானார் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

கடைசியாக, அக்கூட்டத்தார், தாங்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாகச் சொல்லி, தாயிபுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.