பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41



"குறைஷிகளே! இக்குன்றின் பின்புறத்தில் ஒரு படை உங்களைத் தாக்க வந்து கொண்டிருப்பதாக நான் சொன்னால், அதை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்டார்கள்.

“ஆம், நாங்கள் நம்புவோம். ஏனெனில், நீங்கள் எப்பொழுதும உண்மையையே பேசுபவர்கள் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்” என்றார்கள் அவர்கள்.

உடனே நபி பெருமானார், “இறைவன் ஒருவனே என்று நீங்கள் உண்மையாக விசுவாசம் கொள்ளவில்லையானால், உங்கள் மீது கடுமையான துன்பம் வந்து இறங்கும் என்று இப்பொழுது நான் எச்சரிக்கிறேன்,” என்றார்கள்.

அவர்கள் அவ்வாறு கூறியதும் குறைஷிகளுக்குக் கோபம் மிகுந்தது.

பெருமானார் அவர்களின் பெரிய தந்தையான அபூலஹப், பெருமானார் அவர்களை அவதூறாகப் பேசியதோடு, அவர்களை நோக்கி மண்ணை வாரி இறைத்தார். பின்னர் குறைஷிகள் மனவருத்தத்தோடு திரும்பிப் போய்விட்டனர்.


29. எந்த ஆசையும் கிடையாது

நபிகள் நாயகம் அவர்களின் அறிவுரைகள் வெகுவேகமாகப் பரவலாயின.

அதைக் கண்ட குறைஷிகளின் கோபத்துக்கு அளவில்லை. பெருமானார் அவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தை உண்டாக்கத் தொடங்கினார்கள்.

பெருமானார் அவர்களின் அறிவுரைகள் மற்றவர்களுக்குக் கேட்காதவாறு குறைஷிகள் கூச்சலிட்டுக் குழப்பத்தை விளைவித்தார்கள். அவர்கள் எதிரிலேயே, அவர்களை இகழ்ந்து பழித்தார்கள்.

பெருமானார் அவர்கள் கஃபாவுக்குச் சென்று வணங்க இயலாமல் தடை செய்தார்கள். அவர்கள் போகும் வழி நெடுகிலும் முட்களைப் பரப்பி வைப்பார்கள். சிறுவர்களையும், வம்பர்களையும் தூண்டிவிட்டு அவர்களை ஏசும்படி செய்வார்கள்.