பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நபிகள் நாயகம் வழியில் 3) ஏர்வாடிப் படைப்போர்: தமிழில் வெளிவந்துள்ள சுல்த்தான் ஷகீதைப் பற்றிய சிற்றிலக்கியங்களில் இது இரண்டாவது ஆகும். இதன் ஆசிரியர், இயற்றப்பட்ட காலம் ஆகிய விவரங்கள் கிடைக்கவில்லை. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் பாண்டியருடன் பொருதிய இரண்டு போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் சிறிய நூலாகும். இந்த நூலின் சுவடிகளும் இப்பொழுது கிடைக்கவில்லை. 4) தீன்னெறி விளக்கம்: இந்த நூலின் ஆசிரியர் ஏர்வாடிக்கு அண்மையிலுள்ள மீசல் கிராமத்தைச் சேர்ந்தவராவார். இவரது இயற்பெயர் முஹம்மது இஸ்ஹாக் என்பதாகும். இளமையிலேயே மதுரை சென்று மடாதிபதி ஒருவரிடம் முறையாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர். பொருட்செறிவும், இன்னிசைச் சந்தமும் நிரம்பிய வண்ணப் பாடல்களை எளிதில் இயற்றிப் பாடும் தகுதி பெற்றிருந்த தால் இவரை மக்கள் வண்ணக் களஞ்சியப் புலவர் என வழங்கி வந்தனர். 1714 விருத்தப் பாக்களைக் கொண்ட இவரது இந்த நூல் சுல்தான் செய்யது இபுராஹிமின் பாரம்பரியம், பிறப்பு, வளர்ப்பு. சமயத்தொண்டு பாண்டிய நாட்டிற்கு வந்தது. தமது பிரச்சாரத்திற்கு இடையூறாக இருந்த பாண்டியருடன் பத்து நாட்கள் போரிட்டு அவனைக் கொன்று அவனது ஆட்சியைக் கைப்பற்றியது. பத்தாண்டுகளுக்கு மேலாக பாண்டிய நாட்டில் ஷரிஅத் ஆட்சியை நடத்தியது, இரண்டாவது போரில் வீரமரணம் எய்தியது. அவரது தியாக தலத்தில் எழுந்த தர்ஹாவிற்கு சேதுபதி மன்னர் மாயாகுளம் என்ற கிராமத்தை சர்வமானியமாக வழங்கியது ஆகிய விவரங்களைத் தெரிவிக்கும் வரலாற்று இலக்கியமாகும். தமிழில் மூன்று காப்பியங்களைப் பாடிய புலவர்களில் இவர் இரண்டாமவர் ஆகும். கி.பி. 1807 - இல் இராஜநாயகம் என்ற