பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நபிகள் நாயகம் வழியில் நாட்டு வரலாற்றில் ஒரு அதிசய நிகழ்வாகத் திகழும் அந்த பத்ரூப்போரின் நினைவுகள் இப்பொழுது சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களுக்குத் தெம்பூட்டியது. பாண்டியரது படை சுல்த்தான் அவர்களது படையை விடப் பல மடங்கு அளவில் மிகுதியாக இருந்தது. இருந்தாலும் இறைவனது நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கையினால், சுல்த்தான் அவர்கள் எதிரியை எதிர்த்து வீராவேசமாகப் போரிட்டார்கள். முடிவு தோல்வி சுல்த்தானது அணியினருக்கு. பாண்டியனது வாளினால் வெட்டப்பட்ட சுல்த்தான் அவர்கள் வீரமரணம் எய்தினார்கள். மனித குலத்தில் மகத்தான இறைத்தூதராகவும் ஏகத்துவ நெறி உலகெங்கும் பரவுவதற்கு அயராது பாடுபட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாகு அவர்களது பேரனாரும், பாலைவனச் சோலையான அரபுநாட்டு மதின மாநகரில் மலர்ந்த பாரிஜாத மலரான செய்யது இபுராகிம் அவர்களது பொன்னுடலைப் புனித சேதுநாட்டு மண் தாங்கிப் பொன்றாத புகழ் கொண்டது. இந்த நிகழ்ச்சி நடந்தது ஹிஜ்ரி 594 துல்கயிதா பிறை 23 (26.09.1198) ஆகும். அதுவரை பாண்டிய நாட்டில் சமய போதனைக்காக வந்த எந்த சமயச்சான்றோரும் கொல்லப்படவில்லை என்பது முக்கியமான செய்தியாகும். எடுத்துக் காட்டாக, கடைச்சங்க காலத்தில் வடக்கே கங்கைநதி தீரத்தில் நிலைத்திருந்த ஆரியர்கள் பாண்டிய நாட்டில் குடியேறினர். அவர்களது - சிவபெருமானை முதற் கடவுளாகக் கொண்ட பல தெய்வ வழிபாடும் சமுதாய மக்களைப் பிரிவினை செய்யும், பிராமணர், வணிகர், சத்திரியர், சூத்திரர் என்று நான்கு வகை வர்ணாசிரம தர்மத்தை நடைமுறைப் படுத்திவந்தனர். இவர்களில் மற்றொரு பிரிவினர் பரந்தாமனாகிய மகாவிஷ்ணுவை முதற் கடவுளாக, (பிரதானக்கடவுளாகக்) கொண்டு ஏகயிறைக் கொள்கை யின் அடிப்படையில் வைணவ சமயத்தைப் பரப்பிவந்தனர். இந்தச் சமயத்தினர்களுக்கு அப்பொழுது இருந்த ஆட்சியாளர்கள், ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்ததால், இந்த இருவகையான சமயக் கொள்கைகளும் மக்களிடையே பரவலாகப் பின்பற்றப் பட்டது.