36
நமது முழக்கம்
பார்க்கிறோம். இந்த விசித்திர நிலையின் மர்மம் என்ன என்ற கேள்வியைத் திராவிடர் இயக்கம் தான் அநேக ஆண்டுகளாகக் கேட்டு வருகிறது.
கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிற நாடு நம் நாடு. ஒரு கடவுளைப் பற்றிக் கூட அல்ல, பல கடவுள்களைப் பற்றி, கடவுள்களின் குடும்பங்களைப் பற்றி, கடவுள்களின் சமூகம் பற்றி! ஆனால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத நாடு, இயேசுவைப் பற்றி எண்ணாத நாடு என்றழைக்கப்படும் ரஷ்யாவிலே, மக்களைப் பிணிகளோ, பஞ்சமோ, வேலையில்லாத் திண்டாட்டமோ அணுகுவதில்லை. இதற்குக் காரணமென்ன? ஏன் இந்த ஏறு மாறான நிலை? இதைத்தான் மே தின விழாவில் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று திராவிட இயக்கம் கேட்கிறது. இந்தக் கேள்வியை வேறு எந்த இயக்கமும் கேட்கவில்லை; கேட்க எண்ணவும் இல்லை; கேட்பார்கள் என்று நாம் கனவு காணவும் முடியாது.
ஆலைத் தொழிலாளி சகுனத்திலே நம்பிக்கை வைத்திருப்பது விசித்திரமானது. அமெரிக்காவிலிருக்கும் தொழிலாளிகள் சகுனம் பார்ப்பதில்லை! ரஷ்யாவிலே உள்ள தொழிலாளர்கள் சகுனம் என்றால் என்ன என்று கேட்பார்க்கள். சகுனம் பாராத மேலை நாட்டுத் தொழிலாளிகள், கடிகாரத்தை கவனித்து நடக்கிற மேனாட்டினர், முன்னேற்றத்தின் உச்சியிலே இருக்கிறார்கள். நம் நாட்டுத் தொழிலாளர்கள் கடிகாரத்திற்கு மதிப்புத் தருவதில்லை, கடிகாரம் வாங்கப் பணமில்லாமலே பஞ்சாங்கம் வாங்கி வைத்துக்கொண்டு